இவ்வாண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படமாட்டாது என நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகடமி அறிவித்துள்ளது.
நோபல் பரிசுகள் தொடர்பில் தீர்மானிக்கும் உறுப்பினர்கள் குழு மீது எழுந்துள்ள பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுகளை வழங்கும் ஸ்வீடன் அகடமியின் நிரந்தர செயலாளர் Anders Olsson வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 பேர் கொண்ட நோபல் பரிசு தேர்வாளர்கள் குழுவின் உறுப்பினரும் கவிஞருமான ஒருவரின் கணவர் மீது 18 பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனால் குறித்த குழு உறுப்பினரை பதவி விலகக்கோரி எதிர்ப்பு வௌியானதுடன், அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து குழுவின் 3 உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.
கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வெளியே பகிரங்கமானதால் எழுந்த எதிர்ப்புக்களின் மத்தியில் அகடமியின் நிரந்த செயலாளராக இருந்த சாரா டேனியஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனால், நோபல் பரிசு அகடமிக்கு எதிராக ஸ்வீடன் முழுவதிலும் எதிர்ப்பு உருவாகியது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் அகடமி மீதான பொதுமக்களின் நன்மதிப்பு மற்றும் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.