உகந்தைமலை முருகனாலயத்தின் உரிமைகோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் உரிமை கோரி  தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி  அவ்வாலயம் தொடர்ந்து  இந்துஆகம முறைப்படி தற்போதைய வண்ணக்கர் பரிபாலனசபையுடன்  இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஒருவருட காலமாக பொத்துவில் மாவட்ட நீதிமன்றில் குறித்த வழக்கு நடைபெற்றுவந்தது.
 
இறுதியாக கடந்த வாரம் நீதிமன்றில் இவ்வழக்கு எடுக்கப்பட்டவேளை  மாவட்ட நீதிபதி எம்.எச்.மொகமட் ராபி வழக்காளி எதிராளி ஆகியோரின் சட்டத்தரணிகளின் வாதங்களை அவதானித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக கட்டளையிட்டார்.
 
வழக்கைத்தொடுத்தவர் மொனராகலையைச்சேர்ந்த கோனார முதியான்சலாகே ஜெயதிக என்பவராவார். எதிராளியாக தற்போது ஆலயத்தை பரிபாலித்துவரும் பொத்துவிலைச்சேர்ந்த சிறிவர்த்தன திசாநாயக்க முதியான்சலாகே சுதுநிலமே என்பவராவார்.
 
எதிராளி சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.கே.பேரின்பராசா சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ஆகியோர் ஆஜராகி உரியஆவணங்களோடு வாதிட்டனர்.
 
கடந்தவருடம் 2020.02.12ஆம் திகதி தொடரப்பட்ட இவ்வழக்கின்படி இவ்வாலயத்திற்கு தானே உண்மையான உரித்தாளி உடமையாளி எனவும் எதிராளியையும் அவரது சேவையாட்களையும் வெளியேற்றி அவர்கள் ஆலயத்துள் எந்தச்செயல்களிலும் ஈடுபடத்தடையாணை பிறப்பிக்குமாறும் ஆலயத்திற்குவரும் காணிக்கை ஏனைய அன்பளிப்புகளை முறையற்ற விதத்தில் கையாண்டுநியாயமற்ற செறிவூட்டல் நிகழ்ந்துள்ளதாகவும் நஷ்டஈடாக 75லட்சருபாவையும் தீர்ப்பு வழங்கப்படும்வரை மாதாந்தம் 2லட்சருபாவை செலுத்தவேண்;டும் என எதிராளிக்கு கட்டளையிடவேண்டும் எனவும் வழக்காளி கோனார முதியான்சலாகே ஜெயதிக வழக்குத் தொடர்ந்தார். 1903இல் எழுதப்பட்டதாகக்கூறும் உறுதியையும் சமர்ப்பித்திருந்தார்.
 
எதிராளியான தற்போது ஆலயத்தை பரிபாலித்துவரும் வண்ணக்கரான பொத்துவிலைச்சேர்ந்த சிறிவர்த்தன திசாhயக்க முதியான்சலாகே சுதுநிலமே தரப்பில் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி
இவ்வாலயம் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட பொதுக்கோயில் எனவும் அவர் மரபுரீதியாக பரம்பரையாக பரி;துரைக்கப்பட்டு ஆலயபரிபானசபையினரால் அங்கீகரிக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்டவரெனவும் நம்பிக்கைப்பொறுப்புச்சட்டத்தின்கீழ் எதிராளிக்கு சட்டரீதியான ஆவணம் எதுவுமில்லை ஆதலால் முகத்தோற்றஅளவிலேயே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.
 
மேலும் இவ்வாலயம் ஆகமமுறைப்படி அமையப்பெற்றதனால் இந்து ஆகம விதிமுறைப்படி பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றுவருவதும் தற்போதுள்ள வண்ணக்கர் பரம்பரை பரம்பரையாக வந்தவரெனவும் அவர் 2015.05.22ஆம் திகதி பாரமெடுத்தவர் என்றும் ஆவணரீதியாக சமர்ப்பிக்கப்பட்டது..
 
இரு திறத்தவர்களது சமர்ப்பணங்களை ஏற்று பரிசீலித்த நீதிபதி ராபி :இது மதவழிபாட்டுத்தளம்.அது தொடர்பில் தொடரப்படும் வழக்கு நம்பிக்கைபொறுப்புச்சட்டத்தின் 102ஆம் பிரிவின் படி பிரதேசசெயலாளரின் சான்றிதழ் இணைக்கப்படவேண்டும். ஆனால் வழக்காளியின் ஆவணத்திலே இது இல்லாதகாரணத்தினால் இவ்வழக்கிiனைகொண்டு நடாத்த வழக்காளிக்கு சட்டரீதியான தகைமையில்லை என தீர்மானித்து வழக்குச்செலவுகள் ஏதுமின்றி வழக்கைத் தள்ளுபடிசெய்து கட்டளையாக்கினார்.
 
ஒரு வருடமாக இடம்பெற்றுவந்த இவ்வழக்கு நியாயமாகதீர்க்கபபட்டதையடுத்து தற்போதைய வண்ணக்கர் சுதா நேற்றுமுன்தினம் விசேட பூஜையொன்றை ஆலயத்தில் நடாத்தினார். அவ்வமயம் அவர்சார்பிலான சட்டத்தரணிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts