உலக வங்கியின் நிதியுதவியுடன் மகாவலி, கமத்தொழில் நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினூடாக காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தின் நெடியமடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத் திட்ட பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஆரியதாச, திட்ட முகாமைத்துவ நிபுணர் அமல் அனுரப் பிரிய, பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். புண்ணியமூர்த்தி, உதிவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, கரடியனாறு, ஆயித்தியமலை, கிரான் ஆகிய கமநல நிலையப் பிரிவுகளில் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.மேலும் இத் திட்டத்திற்காக 50 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு 50 ஏக்கர் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் விவசாயிகளின் பங்கு முக்கியமான பங்காக இருக்கின்றது, எங்களது மாவட்டத்தில் முக்கிய பொருளாதாரத்தை கொண்டுவருபவர்கள் விவசாயிகள் என இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.