தந்திரோபாய செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை வெற்றிகொள்வதற்கு, மக்கள் அதனை ஆதரிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த செயற்றிட்டங்களில் தரகுப்பணம் பெறுதல் உள்ளிட்ட ஊழல் மோசடிகளை தவிர்ப்பதும் அவசியமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்தி மூலோபாய கருத்திட்டங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் மத்தியில் திட்டமிட்டு, மக்களுக்கு தெரியாமல் பரசூட் மூலமாக குண்டுகளை இறக்குவது போன்று அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன என்று ஸ்ரீநேசன் இதன்போது சுட்டிக்காட்டினார். இதனை மக்கள் வரவேற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தமையால், பல கோடி ரூபாய் பெறுமதியான முதலீட்டுத் திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஊழல் மோசடியும் இதற்குக் காரணம் எனத் தெரிவித்த ஸ்ரீநேசன், மட்டக்களப்பில் வறுமானத்தை ஈட்டித்தந்த காகித ஆலை தோல்வியில் முடிந்தமைக்கு நிர்வாக பொறிமுறை சிறப்பாக இல்லாமையே காரணம் என மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், தந்திரோபாய செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை சிறந்த முறையில் கொண்டுசெல்ல வேண்டுமாயின், கையூட்டு தன்மை, தரகுப்பணம், மோசடிகள் என்பவற்றை இல்லாதொழிப்பது அவசியம் என்றும், உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்தார்.