இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி

இலங்கையில் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது23 பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் எப்போதும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கும் பலத்த மழை பெய்யும் என்பதால் மக்களை அவதானமாக செயல்படுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

 இரவு முதல் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கையின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பிரதேசத்தில் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் அதிகரிக்கும் அச்ச நிலை இருக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக மின்வலு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதனால் சுமார் 50,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
இந்த நிலையில், வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் நிலை இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிக்கும் நீர், உட்கொள்ளும் உணவுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் கோரியுள்ளனர்.
வெள்ள பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என்ற பிரதேசங்களில் இருக்கும் மக்கள், இருப்பிடங்களை விட்டு வெளியேற எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என இடர்முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேவைப்படும் முக்கியமான பொருட்களை மட்டும் சிறிய பொதியொன்றில் எடுத்து வைத்துக் கொண்டு தயார் நிலையில் இருப்பது பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்
வெள்ள பாதிப்புக்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் கடற்படையினர் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்திற்கு குறைவாக வாகனங்களைச் செலுத்துமாறு ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை பெய்யும்போது வாகன விளக்குகளை ஒளிரவிடுமாறும், இது சாலை விபத்துக்களைத் தடுக்க உதவும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts