எட்டு இலட்சம் பெறுமதியான வீட்டை நம்பி மழையில் நனையும் தங்கவேலாயுதபுரம் மக்கள்.

(சா.நடனசபேசன் )

நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற காலகட்டத்தில் அபிவிருத்திகளைக்காணாது தங்களுக்கான  அடிப்படைத்தேவைகள் சரியானமுறையில் நிறைவேற்றப்படாமல் ஏங்கித் தவிக்கும் பல கிரமங்கள் இருக்கின்றன. அக்கிராமங்களின் வரிசையிலே தங்கவேலாயுதபுரம் கிரமத்தினதும் மக்களினதும் அவலநிலை தொடர்பாகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

கடந்த வாரம் சுவிஸ் உதயத்தினால் அம்மக்களுக்கு உதவி வழங்குவதற்காக கரடு முரடான பாதைவழியே இரண்டு பக்கமும் யானை வேலி அமைக்கப்பட்டு இருந்த காட்சிகளைப் பார்த்த வாறு வீதியின் ஊடாகச்   சென்றபோது காடுகளுக்கு மத்தியில் ஒரு கிராமம் தென்பட்டது அதுவே தங்கவேலாயுதபுரம் கிராமம் என சுவிஸ் உதயத்தின் பிரதிப்பொருளாளர் எஸ்.சுபாஸ் மற்றும் பாவாணர் அக்கரைப்பாக்கியன் எனது நண்பன் கண்ணன் ஆகியோர்கள் தெரிவித்தார்கள்.

இக்கிராமமானது அம்பாரை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசசெயலகப் பிரிவில் திருக்கோவில் பொத்துவில் பிரதானவீதியின் தாண்டியடிச் சந்தியில் இருந்து மேற்குப்புறமாக எவ்வித வசதிவாய்ப்புக்களும் இல்லாது காட்டுக்குள் இருக்கின்ற ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் 600 குடும்பங்கள்  வாழ்வதுடன் இவர்களது பிரதான தொழிலாக சேனைப்பயிர்களான கச்சான்,சோளன் குரக்கன் போன்றவைகள் செய்கைபண்ணி தங்களது வழ்வைப் போக்குகின்றனர்.

இக்கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தினால் இடம்பெயர்ந்து தங்களது உடமைகளை முழுமையாக இழந்து அகதியாகச்சென்று  பின்னர் 2006 ஆம் ஆண்டு மீளக்குடியமர்த்தப்பட்டும் அவர்களுக்கான  அடிப்படைத்தேவைகள் இன்னும் சரியாகப் பூர்த்திசெய்யப்படாமல் அவல வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இங்கு போக்குவரத்து,சீரானவீதி, வைத்தியசாலை பொதுநூலகம், தபாலகம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கின்னர்.

இக்கிராமத்தில் போக்குவரத்துவசதி சீரானமுறையில் இடம்பெறுவதில்லை என அம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதாவது அங்கிராமத்தில் இருந்து திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதிக்கு வருவதற்கு  6 கிலோமீற்றர் நீளமானவீதி இருப்பதுடன் அவ்வீதி பாரிய கிடங்குகளாக காட்சியளிப்பதுடன் போக்குவரத்துச்செய்யமுடியாத நிலை இருக்கின்றது. இதனால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து  ஒருதடவை காலையில் வந்து  பயணிகளை ஏற்றிச் சென்று மீண்டும்; பிற்பகலில் அக்கிரமத்திற்கு வந்துசேருவதாகவும் அந்தப் பேருந்தைத்  தவறவிட்டால் காட்டுவழிப்பாதைகளில் கால்நடையாக  வந்துசேரவேண்டிய நிலை இருக்கின்றது.

அது ஒருபுறம் இருக்க மாலை 4.00 மணிக்குப்பின்னர் யானைகள் வீதிகளிலும் கிராமத்துக்குள்ளும் நுழைவதனால் 4 மணிக்குப் பின்னர் போக்குவரத்துச் செய்வதிலும் பாரிய சிக்கல் இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்று இருப்பதுடன் அங்கு அதிபருடன் இரு ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். அங்கு  சுமார் 20 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். தரம் 5 கற்றபின்னர் கல்வியைத் தொடர்வதற்கு சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள திருக்கோவில் கிராமத்திற்குச் செல்லவேண்டியிருப்பதுடன் தங்கவேலாயுதபுரத்தில் இருந்து பேருந்தில் காலையில் 7.10 இற்கு மாணவர்கள் புறப்பட்டால் கரடு முரடான பாதையால் பேருந்து திருக்கோவில் கிராமத்திற்குச் சென்று பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் போது ஒருபாடவேளை முடிவடைந்து விடுவதாகவும் அத்தோடு பாடசாலை விட்டதும் பிற்கல் வேளையில் வரும் பேருந்தில் ஏறி தங்களது வீடுகளுக்கு   3.30 மணிக்குப்பின்னரே வந்து சேருகின்றனர் இதனால் மாணவர்கள் இடைநடுவில் தங்களது கல்வியை கைவிடும் நிலை  ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு மீளக் குடியேறியபோது 2 இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டம்  ஒரு சிலருக்கு வழங்கப்பட்டு அந்த வீட்டில் வாழ்ந்துவந்துள்ளனர். இன்று அரசாங்கத்தினால் 8 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்படஇருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து பழைய வீடுகளை பிரித்து அவ் வீட்டோடு  இணைந்ததாக  புதிய வீடுஅமைக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்ததை நம்பி  வீட்டை முற்றாகப் பிரித்து வேலைகள் ஆரம்பிப்பதற்கு 70 ஆயிரம் ரூபா  நிதி வழங்கியுள்ளனர். இந்த நிதியைப் பயன்படுத்தி  ஒருசில வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதுடன் ஏனைய வேலைகள் எதுவும் ஆரம்பிக்காமையால் அம்மக்கள் ஆட்டுக் கொட்டகை போன்ற சிறிகுடிசைகளில் மழைக் காலத்தில் வாழ்ந்துவருகின்றனர்.

இவ்வீட்டுத்திட்டத்தை விரைவாக முடித்துத் தருமாறு அதிகாரிகளிடம் கேட்டால் அரசாங்கம் மாறிவிட்டது எம்மால் எதுவும் செய்யமுடியாது எனத்தெரிவிப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் எந்த அரசாங்கம் ஆண்டாலும்சரி அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டடி பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. இருந்த வீட்டையும் பிரித்து புதுவீட்டை நம்பி ஏமாந்து தவிக்கும் இம்மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பது யார்? எந்த அரசாங்கம் வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களது வீடுகளை பூரணப்படுத்திக் கொடுக்கவேண்டியது நாட்டின் தலைவர்களது கடப்பாடாக இருக்கின்றது.இதனை மறந்து செயற்டுவது அம் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும்.

தேர்தல் காலத்தில் உரிமை என வீர வசனம் பேசிக்கொண்டு பலர் வந்துசென்றதாகவும் தேர்தலுக்குப்பின்னர் யாரும் வருவதில்லை இன்று யார் தமிழ்தரப்பு அரசியல் வாதிகள் என்பதும் எமக்குத் தெரியாமல் இருக்கின்றது எனத்தெரிவித்தனர்.

அதேவேளை 7 ஆம் மாதத்திற்குப் பின்னர் குடிநீருக்குப் பரிய தட்டுப்பாடு நிலவுவதுடன் பவுச்சர் மூலமே குடிநீரைப் பெறவேண்டியுள்ளமையால் குழாய் நீர்வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

அக்கிராமத்தினைச் சேர்ந்த  அருணாசலம் வடிவேல் அவர்கள் தெரிவிக்கையில் நான் இங்கு பூர்வீகமாக வசித்துவருகின்றேன் இங்கு அடிப்படை வசதிகள் சரியாக இல்லை வீதிகளை நீங்கள் வரும்போது பார்த்து இருப்பீர்கள் அதனால் எந்த வாகனங்களும் செல்லமுடியாது. . திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் இருந்து 6 கிலோமீற்றர் தூரமான வீதி குன்றும் குழியுமாக இருப்பதனால் பேருந்தும் வீதியால் செல்லமுடியாமல் இருக்கின்றது.

வீதியைச் செப்பநிட்டுத் தந்தால் பேருந்தும் சீராகச் செல்லவதற்கு இலகுவாக இருக்கும்  இன்று போக்குவரத்துச் சரியாக இல்லாமையால் மாலை 4 மணிக்குப் பிறகு கால் நடையாகவோ அல்லது மோட்டார் சைக்கிலிலோ செல்லவேண்டும் ஆனால் இவ்வாறு செல்ல முடியாது. ஏன் எனில் யானைகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது யானைகள் வருவதனைத் தடுக்க மின்சார வேலி அமைக்கப்பட்டு இருக்கின்றது.  ஆனால் யானையின் வருகையினைக் கட்டுப்படுத்த முடியவில்லை அண்மையில் நான் இருந்த வீடும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமாகியுள்ளது

.எனவே இந்நிலையினைக் கருத்தில்கொண்டு வீதியைச்செப்பநிடுவதுடன் ஏனைய அடிப்படைத்தேவைகளையும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நிறைவேற்றித்தரவேண்டும் என்றார்.

அக்கிராமத்தில் வசிக்கும்  இருதயநாயகி அவர்கள் தெரிவிக்கையில் எமக்கு வாழ்வதற்கு வேறு இடமில்லை அதனால்தான் எங்களது பூர்வீக இடத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். ஆனால் இங்கு உருப்படியாக எந்த அடிப்படைத்தேவைகளும் செய்துதரப்படவில்லை குறிப்பாக வைத்தியசாலை அவசியம்  ஏன் என்றால் போக்குவரத்து வசதியற்றதுடன் தனியார் போக்குவரத்து வசதியும் இல்லை. அத்தோடு இங்கு பாம்புக்கடி அடிக்கடி இடம்பெறுவது வழமை அவ்வாறு ஏற்பட்டால் சுமார் 15 கிலோமீற்றர் தூரம்  உள்ள  திருக்கோவில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டும்.  அதிலும் செல்லும் பாதை காட்டுவழிப்பாதை 4 மணிக்குப்பின்னர் செல்வதில் உயிருக்கு ஆபத்து இவ்வாறான நிலையில் பாம்புக்கடி ஏற்பட்டவர் அல்லது வேறு ஏதாவது விபத்து, பிரசவம் என்பவற்றுக்காக  திருக்கோவில் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும் போக்குவரத்து இல்லாததனால் மோட்டார் சைக்கிலில்  நோயாளியை எடுத்துச் செல்லவேண்டும். இரவில் செல்வதற்கு ஏற்ப வீதியும் சீராக இல்லை இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு இங்கு சிறியதோர் வைத்தியசாலையினை அமைத்துத் தர அரசியல் தலைவர்கள் உதவ வேண்டும்  அதேவேளை சிறியதோர் காய்ச்சல் ஏற்பட்டாலும் மிகத் தொலைவில் இருக்கும் திருக்கோவில் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டு அவ்வாறு சென்று வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லை மருந்து எடுத்துவருவதற்கு ஒருநாள் முற்றாகத் தேவைப்படும் இதனைக் கருத்தில் கொண்டு வாரத்தில் இருநாளாவது  பகல் வேளைகளில் மருந்து கொடுப்பதற்கான வசதிகளைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நா.ஜெகதீஸ்வரி எனும் குடும்பப் பெண்  கருத்துத்தெரிவிக்கையில்  எங்களது பிள்ளைகளது கல்வி முற்றாகப் பாதிக்கப்படுகிறது ஏன் என்றால் 5 ஆம் தரம் கல்வி கற்ற பின்னர் எங்கள் கிராமத்தில் படிக்கமுடியாது அதனால் வேறுபாடசாலைக்குச் செல்லவேண்டும் அவ்வாறு செல்வதற்கு எவ்வித வசதிகளும் இல்லை. போக்குவரத்து பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. அக்கரைப்பற்று இலங்கை போக்குவரத்துச்சபையின் பேருந்து ஒரு தடவை கிராமத்தில் இருந்து அக்கரைப்பற்றுவரைச்சென்று பிற்பகல் வேளையில் மீண்டும் ஒருதடவை வருகைதந்து செல்கின்றது.இது எங்களது பிரயாணத்திற்கு போதாமல் உள்ளது கட்டாயம் ஒரு நளைக்கு மூன்றுதடவை பேருந்து வந்து செல்லவேண்டும் அதற்கான ஒழுங்குகளை உரியவர்கள் மேற்கொள்ளவேண்டும்.

அத்தோடு எங்கள் கிராமத்திற்கு பிரதான மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது ஆனால் எங்களது  குடியிருப்புகளுக்கு மின்சாரம் பெறும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை  இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றோம். எங்களது வீட்டுக்கு மின்சாரம் பெற்றுத்தர சுவிஸ் உதயம் போன்ற அமைப்புகள்  முன்வர வேண்டும்.

அத்தோடு எங்களது பாடசாலை ஆரம்பப் பாடசாலையாக இருக்கின்றது இதனைத் தரம் உயர்த்தவேண்டிய தேவை இருக்கின்றது ஏன் எனில் நீண்டதூரம் சென்று கல்வியைத் தொடர முடியாது. எங்களது பிள்ளைகள் கல்வியைத்  தொடரவேண்டும் அதற்காக எங்களது பாடசாலையினைத் தரமுயர்த்த நடவடிக்கைமேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.நானும் மட்டக்களப்பில் கல்விகற்று சாதாரணதரம் சித்திபெற்றவள் ஆனால் தொடர்ந்து கல்வியைத் தொடரமுடியாமல் போய்விட்டது இந்நிலை எங்களது பிள்ளைகளுக்கு வரக்கூடாது எனத் தெரிவித்தார்.

நாட்டில் வாழுகின்ற பெரும்பாலான மக்கள் பல்வேறு வசதிவாய்ப்புக்களுடன் வாழுன்றபோது ஒருசிலர் தங்களுக்கான வசதிவாய்ப்புக்கள் சரியானமுறையில் பெறமுடியாது அவஸ்தைப் படுவதுடன்  அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்படுவது எந்தவகையில் நியாயம்.

அந்தவரிசையில் தங்கவேலாயுதபுரம் மக்களது தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அதிகாரிகளதும் அரசியல்வாதிகளதும் கடப்பாடாகும். இதைவிடுத்து தேசியம் பேசி எதையும் பெறமுடியாது.குறிப்பாக அம்மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யார் என்பதை அறியாத மக்களை அரசியல் வாதிகள் நேரடியாகச் சென்று ஒருசில அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது நல்லதல்லவா?

  

 

Related posts