எதிர்வரும் 2028ல் ஒலிம்பிக் பதக்கங்களை வெற்றிகொள்ளும் வீரர்களைத் தயார்படுத்தும் “ரோட் டூ ஒலிம்பிக்” என்ற விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் 2028ல் ஒலிப்பிக் பதக்கங்களை வெற்றிகொள்ளும் வீரர்களைத் தயார்படுத்தும் “ரோட் டூ ஒலிம்பிக்” என்ற விசேட திட்டம் மட்டக்களப்பு மன்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. விiயாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து “ரோட் டூ ஒலிம்பிக்” என்ற புதிய திட்டத்தினை இலங்கையில் முதன் முறையாக வைபவரீதியாக சகல மாவட்டங்களிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ரோட் டூ ஒலிம்பிக் எனும் இத்திட்டமானது சர்வதேச நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வதற்காக விஞ்ஞானரீதியாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுத் துறைப் பயிற்சியினைக் கொண்ட விசேட திட்டமாகும். இத்திட்டத்தினை இலங்கையில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தி தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கு தொடர்ச்சியாக 8 வருடங்களுக்கு முறையா விளையாட்டு மற்றும் உடற்தகுதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு 2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வீரர்களைப் பங்குறச் செய்து இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களை வெற்றிகொள்ளச் செய்யும் நோக்குடனேயே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைவாக விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து “ரோட் டூ ஒலிம்பிக்” என்ற இவ்விசேட திட்டத்தினை ஒரு பரீட்ச்சாத்தத் திட்டமாக நாட்டின் 25 மாவட்டங்களிலுமுள்ள 25 வலயங்களைத் தெரிவு செய்து நடைமுறைப்படுத்துகின்றது. இதில் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மன்முனை வடக்கு கல்வி வலயமும், அவ்வலயத்தின் கீழ் இயங்கும் குறுஞ்சாமுனை சக்தி வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயதையுடைய விளையாட்டுக்களில் ஆர்வமுள்ள உடற்தகுதியுடைய மாணவர்களில் 25 ஆண்மாவர்களும், 25 பெண் மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இத்திட்டம் இன்று (13) மட்டக்களப்பு மன்முனை மேற்கு பிரதேசத்தின் மன்முனை மேற்கு வலயக்கல்விப் பிரிவில் இயங்கும் குறுஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட விiளாயட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சி. ஸ்ரீதரன் கலந்து கொண்டதுடன் உடற்பயிற்சிக்கான உதவி வலயக்கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.