மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன்” என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கடந்த ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும்,அவரது சாகாக்களும் (24) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுகையில், ஊடகங்களுக்கு தனது விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், என்னுடைய வழக்கு என்பது திட்டமிட்ட ஒரு பழிவாங்கல்.அதை இன்று தான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்கனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன்.என்னைநம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி என்னை நம்பி நான் வெளியில் வரவேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
சுமந்திரன் பற்றி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
உங்களுக்கு தெரியும் அவர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், நான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.அவருக்கு கிடைத்த வாக்குகள் எத்தனை? எனக்கு கிடைத்த வாக்குகள் எத்தனை? அவருடைய வாதம் என்னவென்றால் பிள்ளையான் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். ஆகவே அவரை வெளியில் விடக்கூடாது என்பதுதான் அவருடைய எண்ணம்.அப்படியாயின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளும் விடுதலை செய்யப்படாத ஒரு நிலையே உருவாகும். ஆகவே அவரது வாதத்தை வேடிக்கையான ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என தெரிவிக்கின்றேன்.கிழக்கு மாகாணம் விரைவில் அபிவிருத்தியடைந்து கட்டியெழுப்படும்.அதற்கான அத்தனை திட்டமிடல் வேலைகளையும் நான் முன்னெடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.