எமது கலாசாரம் பாரம்பரியம் பண்பாடு அருகிப்போகாமலிருக்கவேண்டுமானால் மாணவர்கள் தமிழ்மொழித்தினப்போட்டிகளில் கட்டாயம் பங்கேற்கவேண்டும்!

எமது கலாசாரம் பாரம்பரியம் பண்பாடு அருகிப்போகாமலிருக்கவேண்டுமானால் மாணவர்கள் தமிழ்மொழித்தினப்போட்டிகளில் கட்டாயம் பங்கேற்கவேண்டும்!
இவ்வாறு  சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்டுபேசுகையில் குறிப்பிட்டார்.
 
அகில இலங்கைத் தமிழ்மொழித்தினப்போட்டியையொட்டி கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் நடாத்திய மாகாணமட்டப்போட்டியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் சம்மாந்துறை வலயத்தைச்சேர்ந்த ஸ்ரீகோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப்பெற்றுச்சாதனை படைத்தது.
 
 அதனைப்பாராட்டும் நிகழ்வு அதிபர் எஸ்.விஜயகுமாரன் தலைமையில் நேற்று  நடைபெற்றபோது சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதமஅதிதியாகவும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எ.சபூர்த்தம்பி உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா எ.ம்.ரசீன் ஆகியோர் கௌரவஅதிதிகளாகவும் கலந்துகொண்டு பயிற்றுவித்த ஆசிரியை திருமதி சிவசாந்தினி கிருசாந்தன் மற்றும் மாணவிகளைப்பாராட்டினார்கள்.
 
அங்கு பணிப்பாளர் நஜீம் மேலும் பேசுகையில்:
பரீட்சைமையக்கல்வியை மையமாகவைத்து போதனைகள் நடந்தேறிக்கொண்டுபோகையில் புறக்கிருத்திய செயற்பாடுகளைப் பலர் புறக்கணிப்பதுண்டு. அதுமகாதவறு.
 
எமது சமயம் பாரம்பரியம் பண்பாடு கலை கலாசாரம் போன்றவற்றை வெளிக்காட்டுவது இந்த புறக்கிருத்தியசெயற்பாடுகள் ஆகும். 
மீலாத்விழா தினப்போட்டிகள் என்பன முக்கியமானவையயாகும். அவற்றில் மாணவர்கள் கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டும்.
 
வெற்றிபெற்ற வில்லுப்பாட்டின் தொனி மனுநீதியாகவிருந்தது. காலத்தின்தேவையாக இந்தத்தலைப்பு இருந்தது பாராட்டுக்குரியது. நீதி தவறினால் சமுகம் மட்டுமல்ல நாடே சீரழியும்.
 
நீதியை நிலைநாட்டும் பண்பு மாணவரிடத்திலே உருவாகவேண்டும்.  நீதியை மதிக்கின்ற சமுதாயம் உருவாக இது வழிகோலும். 
 
வில்லுப்பாட்டிற்கு பயிற்சியளித்த ஆசிரியை திருமதி சிவசாந்தினியின் முயற்சி தியாகத்தைப் பாராட்டுகின்றேன். சிறப்பாகச்செயற்பட்ட மாணவிகளையும் அவர்களுக்கு உடைகள் வழங்க அனுசரணையாகவிருந்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலையும் பாராட்டுகின்றேன்.
 
கோரக்கரிலுள்ள வளம் மற்றும் களம் என்பன சிறப்பானது. எனவே இவற்றைப் பயன்படுத்தி அடுத்தமுறை முதலாம் இடம்பெறவேண்டும்.என்றார்.
 
வெற்றிபெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் மேடையேற்றப்பட்டது.
 
விழாக்குழுச்செயலாளர் ஆசிரியை திருமதி சிவசாந்தினி கிருசாந்தன் நன்றியுரையாற்றினார்.

Related posts