தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்“ எழுர்ச்சிப் பேரணிக்கான முதற்கட்ட யாழ் சிவில் அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு 10 ஆம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் பேரவையில் இணைத்தலைவரும் முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கடந்த தசாப்தங்களில் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் மத்தியில் நடைபெற்ற சொல்லொணா துயரங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள், காணி சுவீகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, வடகிழக்கு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு, இடபெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களது சொந்த இருப்பிடத்தில் மீள குடியமர்த்தப்பட வேண்டும் அரசியல் கைதிகள் உரிய சட்டத்தின் பிரகாரம் விடுவிக்கப்பட வேண்டும் யுத்தக்குற்றங்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு நீதிப்பொறிமுறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் பேரவையின் கவனத்தை ஈக்கும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் எழுக தமிழ் எழுர்ச்சி பேரணியானது செப்டம்பர் 16 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முற்றவெளியை நோக்கி பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இப்பேரணியானது நல்லூர் முருகன் ஆலயத்திலிருந்தும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும் இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டு முற்றவெளியில் எழுக தமிழ் பிரகடன வாக்குறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்ட அமைப்புகளுக்கான சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் எம். லக்ஷ்மன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் பசுமை இயக்கத்தின் தலைவர் பீ.ஐங்கரநேசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் எம்.கே. சிவாஜீலிங்கம் தமிழ் மக்கள் கூட்டணியின் அங்கத்தவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது எழுக தமிழ் பேரணி நிகழ்வில் செயற்குழு நியமிக்கப்பட்டதுடன் எழுக தமிழ் பேரணி நிகழ்த்துவதற்கான காரணம் என்ன என்பது பற்றி இணைத்தலைவர் சீ.வீ விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.