ஒவ்வொரு முஸ்லிம் கிராமமும் தற்போது சோர்ந்து போய்க் கிடக்கின்றது. அடுத்த கட்டம் என்ன செவ்வதென்று தெரியாமல் அம்மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்

நமது பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் உண்மைக்குண்மையான அரசியல் வழிகாட்டிகள் இல்லாமல் ஒவ்வொரு கிராமமும் தற்போது சோர்ந்து போய்க் கிடக்கின்றது. அடுத்த கட்டம் என்ன செவ்வதென்று தெரியாமல் அம்மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அலையும் வாக்காளர்களில் பலர் இன்று ஆட்சியாளர் பக்கம் சென்று கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநகர சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்  அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், எந்தவோர் விடயத்தினை எடுத்து நோக்குகின்றபோதிலும் அதன்பாலுள்ள தலைமைத்துவம் என்பது மிக முக்கியத்துவம் பெறுகின்றது. தலைமைத்துவம் என்பது 
 
தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்ததன் காரணம் அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கும், அவர்கள் உயர்ந்து செல்வதற்கும் அவர்கள் உழைப்பதற்கும் என்ற உண்மை இன்று வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 
 
அவர்கள் மீது சுமத்தப்பட்ட எத்தனையோ பிரச்சினைகளைப் பார்ப்பதற்கே அவர்களுக்கு தற்போது நேரமில்லாமல் இருக்கின்றது. மக்களைப் பற்றிய தூய எண்ணத்தோடு அவர்கள் அரசியல் செய்யாமையே இவற்குக் காரணம் எப்போதும் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் அப்போதுதான் அனைத்து விடயங்களும் சிறந்த முறையில் இடம்பெறும். உண்மைக்குண்மையாக தூய சிந்தனையின்றி மக்களை வைத்து சுயலநம அரசியல் செய்தவர்களுக்கு சிறந்த பெறுபேறு கிடைத்திருக்கின்றது.
உண்மையையும், மக்கள் நலன் சார் கருத்துக்களையும் சொல்லி வந்த எமது குரலை நிலம் தொடர்பான எல்லைகளைக் கொண்டு எமது குரலை மட்டுப்படுத்தி மாசுபடுத்த எத்தனித்த அரசியல் தலைவர்களின் நிலை தற்போது என்னவாகியுள்ளது என்பதனை மக்கள் நன்குணரும் வகையில் அவர்களின் நிலை ஆகியிருக்கின்றது.
இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகத்தினர் நமது இலங்கைத் திருநாட்டின் மீது மிகுந்த பற்றுவைத்து செயற்பட வேண்டும். நாம் இலங்கையர் என்ற உண்மைக்குண்மையான உணர்வுடன் செயற்பட வேண்டும்.  இஸ்லாமியர்களைப் பொறுத்த வரையில் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய இலங்கை நாடாகும். இந்த மண்ணுக்கென்று ஓர் புனிதத்துவமும் கௌரவமும் இருக்கின்றது.
எமது நாட்டின் சுதந்திர தினங்களை பள்ளிவாசல்கள், கோயில்கள், உள்ளுராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமது நாட்டின் சுதந்திர தினத்தினை உணர்வு ரீதியாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடி மகிழும்போது இந்த மண் எமது மண் என்பதை காட்டி நிற்கும் உணர்வு மேலோங்கச் செய்யப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 
இந்நாட்டில் பெறும்பாம்மைச் சமூகத்தினர் செறிந்து வாழ்ந்து வரும் நிலையில் சிறுபான்மைச் சமூகத்தினைப் பொறுத்த வரையில் சுமார் 26 சதவீதம் கொண்ட நமது தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நாம் நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் நாட்டுப் பற்றுமிக்கவர்களாக நாம் அனைத்து இனத்தவர்களுடனும் ஒற்றுமைப்பட்டு வாழ வேண்டும். நாமும் நமது எதிர்கால சந்ததியினரும் இவ்வாறு நாட்டுப்பற்றாளர்களான வாழ்வதற்கு நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.
எம்மத்தியல் உள்ள பலர் நாட்டுப் பற்றற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் சிலரால் வேண்டுமென்று நாட்டுப்பற்றற்றவர்களாக ஆக்கப்பட்டும் இருக்கின்றார்கள். வெறுமனே துவேசங்களை மாத்திரம் பேசிப் பேசி நாடு நம்முடையது என்ற உணர்வுகளுக்கப்பால் நமது மக்களை வேறு திசைகளில் கொண்டுபோய்ச் சேர்ந்திருக்கின்றார்கள். தங்களுடைய அரசியல் தேவைகளுக்காக மாத்திரம் சிலர் இந்நாட்டில் உள்ள மக்களை கூறுபோட்டு அவர்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அவர்களுக்கான அரசியலை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மிக நீண்ட காலமாக சமூகத்திற்கு தேiவானதும், உண்மைக்குண்மையாதுமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் என்றுமே ஒரே கருத்தினை அக்கரைப்பற்று மாநகர மண்ணிலிரந்து மிகத் துணிவோடு நாம் சொல்லி வருகின்றோம். காலத்திற்குக் காலம் சுயநலத் தேவைகளுக்காக நாம் கருத்துக்களை மாற்றிச் சொன்ன சரித்திரமே கிடையாது. என்றுமே உண்மையினை மாத்திரமே நாம் சொல்லி வருகின்றோம். உண்மையினை உரத்துச் சொல்வதற்கு நாம் என்றும் தயங்கியதும் கிடையாது பின்னின்றதும் கிடையாது.
பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மரணித்து 19 வருடங்கள் கடந்த நிலையில் எமது சிறுபான்மை முஸ்லிம் கட்சித் தலைமைகள் நமது சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றார்கள்?, நமது சமூகத்திற்கு அவர்கள் என்ன ஆலோசனை செய்திருக்கின்றார்கள்? இந்த 19 வருடங்களில் எமது சிறுபான்மைப் பிரதேசங்களில் அவர்களால் நடந்துள்ள அபிவிருத்திகள் என்ன என்பதை மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாங்கள் தேசிய காங்கிரஸ் என்னும் இயக்கத்தினை தொடக்கி நாட்டு மக்களுக்கு பல்வேறு விடயங்கள் பற்றிச் சொன்னோம். நாடு பற்றி நாம் என்ன சொன்னோம், பயங்கரவாதம் தொடர்பில் நாம் என்ன சொன்னோம், அதிகாரப் பகிர்வு, அபிவிருத்தி தொடர்பில் நாம் என்ன சொன்னோம் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக ஒரே கருத்துக்களைத்தான் கூறிவருகின்றோமே தவிர, சுயநலத்திற்காக எப்போதும் நாம் கருத்துக்களை வெளியிடுவதுமில்லை என்பதை மக்கள் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்பிலும் வெளிநாடுகளின் நமது நாடு தொடர்பான கபளீகரச் செயற்பாடுகள் தொடர்பில் அத்தேர்தல் முடிந்த கையோடு நாம் மக்களுக்கு மேடை போட்டு பல செய்திகளைச் சொன்னோம். இவர்களது ஆட்சியில் இனப்பிரச்சினைகளும் கலவரங்களும் தலைதூக்கும் என்று சொன்னோம், சிறுபான்மைச் சமூகம் அடக்கி ஒழுக்கப்படுவார்கள் என்று சொல்லிருந்தோம் இதுபோல் பல விடயங்கள் பின்னாளில் நாம் சொன்ன அனைத்து விடயங்களும் இந்நாட்டில் நடந்தேறியதை நமது மக்கள் நன்குணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
அரசியல் கட்சிகள் என்பது எதற்காக? ஆக்கட்சி மூலம் மக்களுக்கு என்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பது பற்றி மக்கள் சிந்தித்து அதன்பின்னால் செல்ல வேண்டும். கட்சி சிறிதாக இருந்தாலும், அதன்பாலுள்ள அங்கத்தவர்கள் குறைந்தளவினராக இருந்தாலும், அக்கட்சிக்கு குறைந்த வாக்காளர்கள்தான் இருந்தாலும் அக்கட்சி பேசுகின்ற விடயம் உண்மைக்குண்மையாக இருந்தால் நிச்சயம் அது எப்போதும் வெற்றியினையே பெறும் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றது.
நாட்டில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் பல்வேறுபட்ட மக்களின் நலன்சார் விடயங்களை வரையறைக்குள்ளும் வரையறைக்கப்பாலும் மேற்கொள்ள முடியும். அந்த வகையில் உள்ளுராட்சி மன்றங்கள் மக்களை மையப்படுத்தி சேவைகள் பலவற்றை மேற்கொண்டு மக்களின் அபிவிருத்தியிலும் பிரதேச அபிவிருத்தியிலும் குறியாக இருந்து செயற்பட வேண்டும். உள்ளுராட்சிக்கு இருக்கும் அதிகாரங்கள் பலமானவை. 
அவ்வுள்ளுராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் வாழும் மக்கள் சிறப்பாக வாழ்வதற்குரிய கட்டமைப்பு அவ்வதிகார சபையினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அம்மக்களுக்காக முறையான பொருளாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். 
ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டும் மண்ணின் மகிமைக்கேற்ற பொருளாதாரத்தினை கட்டியெழுப்பக் கூடிய வசதிகளும் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க முடியும். இவ்வாறாக கல்வி, கலாசாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை அபிவிருத்திகளையும் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அக்கரைப்பற்று மாநகர அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு சாதனை புரிந்து தேசிய மட்ட வெற்றிகளைப் பெற்ற பாடசாலை மாணவர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த வருடம் நடைபெற்ற பொதுப் பரீட்சைகளில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அக்கரைப்பற்று மநாகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் போன்றோர் ஆற்றிய சிறந்த சேவைக்காக மாநகர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts