கடந்த அரசாங்கங்கள் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்திக்கொண்டனர் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
‘சிரிசர பிவிசும’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திருகோணமலை சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், “1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்கள்.
வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்கங்களும் குறைந்தளவு கவனத்தையே செலுத்தியுள்ளன.
வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப்பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும். நாட்டை பிளவுப்படுத்தாத அதிகார பகிர்வு எனப்படும் எண்ணக்கரு அப்போதே யதார்த்தமாகும்.
யுத்தம் நிலவிய பிரதேசங்களில் மக்களிடையே நிலவும் அச்சத்தை தீர்க்கும் முகமாக இன, மத ரீதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசு பாரிய பங்காற்றியுள்ளது. அதனூடாக மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என கூறினார்