நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி துறைமுகத்தை நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் குளோரி எனப்படும் சரக்கு கப்பல் ஹுனவடுன்ன கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலி கடற்பிரதேசத்தின் ஹுனவடுன்ன – ருமஸ்வெல எனும் இடத்திலேயே இவ்வாறு கரையொதுங்கி உள்ளது.
இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கன் குளோரி சரக்கு கப்பலே இந்த அனர்த்தத்தை நேற்று எதிர்கொண்டுள்ளது. இதில் கப்பலுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 15 தொன் எரிபொருள் காணப்படுகிறது.
இந்த கப்பலில் இருந்த 9 பேரும் கடற்படையினரால் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த கப்பலில் ஏதேனும் சிதைவுகள் ஏற்பட்டால் அதிலிருக்கும் எரிபொருள் கசிவதோடு, அது கடல் நீரில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், எவ்வாறு பாதுகாப்பான முறையில் கப்பலை மீட்பது என்பது குறித்து கடற்படை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.