ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு குறித்த சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாடு குறித்து இன்று வரையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை.
கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சுதந்திர கட்சியின கம்பஹா மாவட்ட செயலாளர் லசந்த அழகியவண்ண வழங்கியுள்ளார்.
சுதந்திரக் கட்சியிலிருந்து என்னை தொடர்ந்தும் ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சம்மேளனத்திற்கு அழைப்படாமை ஊடாக வெளிப்படுகின்றது. எனவேதான் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சி சம்மேளனத்தை தவிர்த்துக்கொண்டேன்” என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.