கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட எம்.பியொருவர், புரளிகளைக் கிளப்புவதாகத் தெரிவித்துள்ள அம்மாவட்டத்தின் எம்.பியான சதாசிவம் வியாழேந்திரன், கடந்த வருடத்துக்கான திட்ட முன்மொழிவுகளை தானே, முதன்முதலில் சமர்ப்பித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட சகல திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றுத் தெரிவித்த அவர், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சில வேலைத்திட்டங்கள் தடைப்பட்டிருந்தன. அதனை, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய செயற்பாடுகளை அறியாத எமது மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பியொருவர், மக்களை ஏமாற்றும் தமது வழமையான பாணியில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு, தனது வங்குறோத்து அரசியலை வெளிப்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்த அவர், தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு, தனது திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி, திறைசேரிக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என்றார்.
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் போதுமானதாக இல்லை என்பதால் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சைக் கேட்டுப்பெற்றேன் என்று தெரிவித்த அவர், துரதிஷ்டவசமாகத் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.