கலைமகள் ஹிதாயாவின் மறைவு சமூக, கலை, இலக்கிய உலகுக்கு பேரிழப்பு; மருதம் கலைக்கூடல் தலைவர் அஸ்வான் மௌலானா அனுதாபம்

தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கிழக்கின் முதுபெரும் பெண் இலக்கிய ஆளுமையான கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் திடீர் மறைவு சமூகத்திற்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும் என்று மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் முன்னாள் முஸ்லிம் கலாசார விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளருமான கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.
 
திங்கட்கிழமை (23) இரவு மரணித்து, செவ்வாய்க்கிழமை (24) மாலை சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
 
“இலக்கிய உலகில் பெண் ஆளுமைகளின் வகிபாகம் மிகவும் அரிது. அந்த வகையில் சாய்ந்தமருது மண்ணில் பிறந்து, இலக்கிய உலகில் மிகவும் புகழோடு பிரகாசித்த கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் இழப்பு மிகவும் கவலையான ஒன்றாகும். அவர் மரணமடைந்த தகவல் எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 
எழுத்தாளராக, கவிதாயினியாக, சமூக ஆர்வலராக, கல்வி, கலாசாரம், சிறுவர், பெண்கள் உரிமைகள் மற்றும் மனித நேய செயற்பாட்டாளராக கடந்த 04 தசாப்த காலமாக மிகச்சிறப்பாகப் பணியாற்றி வந்த கலைமகள் ஹிதாயா, இறுதி மூச்சுவரை தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். மரணிப்பதற்கு முதல் நாளன்று கூட தனது முகநூலில் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதுவும் ஆத்மீகம் மற்றும் மரணம் தொடர்பில் அவரது கரிசனையையும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தால் சமூகம் அடைந்திருக்கின்ற வேதனைகளையும் பதிவு செய்திருக்கிறார்.  
 
இவர், ஆத்மீக சிந்தனைத்தளத்தில் நின்று, சமூகப் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதிலும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதிலும் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்காகவும் தனது எழுத்தாளுமை ஊடாக பெரும்பங்காற்றியுள்ளார். இவரது படைப்புகள் இலங்கை மற்றும் தமிழ் நாடு தேசிய பத்திரிகைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவர் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
அத்துடன், தடாகம் கலை இலக்கிய வட்டத்தை ஆரம்பித்து, அந்த அமைப்பினூடாக கடந்த நான்கு தசாப்த காலமாக ஓய்வின்றி தமிழ் இலக்கியத்துறை வளர்ச்சிக்காக பெரும்பங்காற்றி வந்துள்ளார். இதன் மூலம் பெருமளவு கலை, இலக்கியவாதிகளை உருவாக்கியிருந்தார். எழுத்து, கலை, இலக்கியத் துறைகளில் ஆர்வமுள்ள பலரை இனம்கண்டு மேடையேற்றியிருந்தார். அவ்வாறே தடாகம் எனும் சஞ்சிகையை வெளியிட்டு இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருந்தார்.
 
இலங்கையில் மாத்திரமல்லாமல் இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா என்று தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான ஓர் எழுத்தாளராக அறியப்பட்டிருந்த கலைமகள் ஹிதாயா- தேசிய, சர்வதேச விருதுகள் பலவற்றைப்பெற்று, சாதனை படைத்திருக்கிறார். கலை, இலக்கிய, பொது வாழ்வில் இவர் எவருடனும் பகைமை கொண்டிருந்ததாக நாம் அறியவில்லை. எப்போதும் மனித நேயத்திற்கே முன்னுரிமையளித்து வந்தார். பெருமை, கோபம், விரோதம் போன்றவை அவரிடம் கிஞ்சித்தும் காணக்கிடைக்கவில்லை. ஆத்மீகத்தில் அதிக விருப்பம் கொண்ட ஒரு பெண்மணியாகத் திகழ்ந்த இவர் மிகுந்த நற்குணங்கள் நிறைந்த ஒருவராகவே திகழ்ந்தார். அவர் எப்போதும் எல்லோருடனும் மிக அன்பாகவும் பண்பாகவும் நடந்து வந்தார்.  
 
இத்தகைய உயரிய நற்பண்புகள் நிறைந்த இலக்கிய ஆளுமைப் பெண்ணின் இழப்பு என்பது சமூக, கலை, இலக்கியப் பரப்பில் என்றும் ஈடுசெய்ய முடியாத வெற்றிடமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
இவரது வணக்க வழிபாடுகள் மற்றும் நற்காரியங்களையும் சேவைகளையும் பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரை இழந்து, துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு மருதம் கலைக்கூடல் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
 

Related posts