கொரோனா தீநுண்மியின் கொடுர தாக்கம் காரணமாக கல்முனைப்பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன.
நேற்று(30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் மீலாதுன்நபி விழா வழமைபோன்று இடம்பெறவில்லை. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகைகளும் இடம்பெவில்லை. -இந்துக்களின் கேதாரகௌரி விரதம் ஏலவே ஆரம்பித்து நடைபெற்றுவந்தபோதிலும் தற்போது பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்லாமல் வீட்டில் இருந்து விரதத்தை அனுஸ்டித்துவருகின்றனர்.
சிவபிரானை நோக்கிய உமையம்மனின் கேதாரகௌரி விரதம் 28நாட்கள் அனுஸ்ட்டிக்கப்படுவது. ஆலயத்திற்கு சென்று காப்பறுத்து பின்பு காப்புக்கட்டி வழிபடுவதுவழமை. இம்முறை எதிர்வரும் 15ஆம் திகதி தீபாவளியன்று காப்புக்கட்டு நிகழ்வு நடைபெறவிருக்கிறது. எனினும் இன்றைய சூழ்நிலையில் காப்புக்கட்டு நிகழ்வை எவ்வாறு நடாத்துவதென்பது பற்றி மதகுருமார் சிந்தித்து வருகின்றனர்.
கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. நேற்றைய நிலைவரத்தின்படி 61பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கிழக்கின் நிலைமை மோசமடைந்துவருவதால் சுகாதாரத்துறையினரால் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.
பொதுமக்கள் ஆலயம் பள்ளிவாசல் தேவாலயம் போன்ற வணக்கஸ்தலங்களுக்குச் செல்லாது வீட்டிலிருந்தே இறைவனை வணங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் சம்மாந்துறை ஹிஜ்ரா பதூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் பூட்டப்பட்டுள்ளதையும் இங்கு காணலாம்.