கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை 1 சி விஸ்ணுபுரம் பகுதியிலுள்ள அரசகாணியை திட்டமிட்டு சட்டவிரோதமாக மண்போட்டுநிரப்பும் நிரப்புவதை கண்ட அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் அங்குநின்றவரால் தாக்கப்பட்டதாக கல்முனைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து குறித்த நபரை கல்முனைப்பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம்(2) கல்முனை 1சி விஸ்ணுபுரப்பகுதியிலுள்ள கடலோரப்பாதுகாப்பு வலயத்தினுள் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தையறிந்த த.தே.கூட்டமைப்பின் அவ்வட்டாரத்திற்குரிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உடனடியாகச்செயற்பட்டு சக உறுப்பினர் கே..சிவலிங்கம் சகிதம் மறுநாளான நேற்று(3) அங்கு சென்றார். மற்றுமொரு த.வி.கூட்டணி உறுப்பினரான எஸ்.சந்திரனும் சமுகமளித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனும் வருகைதந்தார்.
குறித்த காணி ‘அரசகாணி’ என குறிக்கும் பெயர்ப்பலகையும் உடைக்கப்பட்டு தூக்கிவீசப்பட்டிருந்தது. அங்கு வெறும்கம்பம் மட்டுமே இருந்ததை அவர்கள் கண்ணுற்றனர்.
ஸ்தலத்தில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஏனைய உறுப்பினர்களோடு கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த முஸ்லிம் நபர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இது தங்களுடைய காணி உங்களுக்கென்ன இங்கு வேலை ? என்றுகூறி உறுப்பினர் ராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானது. இனமுறுகல் ஏற்படுவதற்கான ஏதுநிலை அங்கு நிலவியது.
அத்தருணம் அங்குவந்த கல்முனை முஸ்லிம் பிரதேசசெயலாளர் ஜெ.லியாக்கத்தலி தலையிட்டு இருசாராரையும் சாந்தப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்….
கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1 சி கிராம சேவகர் பிரிவிலேயுள்ள அரச காணியொன்றில் மண் இட்டு நிரப்பும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை இங்குள்ள முஸ்லீம் தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட விடயம். இதனை கிராம சேவகர் தடைசெய்துள்ளார். கிராம சேவகர் தமது கடமையை முன்னெடுத்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தை நாங்கள் பார்வையிட்ட போது அரச காணியொன்றை விளம்பரப்பலகை அகற்றப்பட்டு மண் நிரப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மீளவும் இவ்விடயம் இங்கு நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுவதும் இங்குள்ள மக்களை சுதந்திரமாக வாழ முடியாத சூழலை உருவாக்குவதுமான செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியான ஒரு வன்முறையை உருவாக்குவதாகவே இருக்கின்றது. தமிழ் மக்களின் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தாமல் இழுத்தடித்து அந்தப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரச காணியை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கையை இந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படக் கூடாது என்று எண்ணுகின்ற அரசியல்வாதியும் அவருடன் சேர்ந்த நபர்களுமே இவ்வாறான பணிகளைச் செய்கின்றார்கள்.
கடந்த மாதம் பெரியநீலாவணையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்று அது தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது இங்கு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இது இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
இங்கு வாழுகின்ற சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டுமானால் ஒரு சமத்துவமான நடுநிலையான நியாயமான வேலைத்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து இவ்வாறான ஆக்கிரமிப்புகள் இடம்பெறும் போது அது சமூகங்களுக்கிடையில் பாதிப்பினை ஏற்படுத்தும். இங்கிருக்கின்ற இரண்டு சமூகங்களையும் இணைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய சுதந்திரமான நீதியான நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இந்த நாட்டின் தலைவர்களுடைய தலையாய கடமையாக இருக்கின்றது.
எனவே இவ்வாறான ஆக்கிரமிப்புப் பணிகள் இத்துடன் நிறத்தப்பட வேண்டும். சமூகங்களை ஒற்றமைப்படுத்த வேண்டும். அரச காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு பொதுவான சில மக்களுக்குத் தேவையான கட்டிடங்கள் அமைக்கப்படுகின்ற போது அரச காணிகள் இல்லையெனக் கூறப்படுகின்றது. எனவே இவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கருத்துரைக்கையில் எமது தமிழ்ப்பிரதேச காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது. நேற்று அவ்வாறான சட்டவிரோத மண்நிரப்பல் இடம்பெற்றபோது கிராமசேவையாளர் வந்து தடுத்தபோது அவர் தாக்கப்பட்டுள்ளார்.இதனையறிந்து பிரதேசசெயலாளர் அதிசயராஜ் வந்தபோது அவருக்கும் தகாதவார்த்தைபேசி நீங்கள் உதவிபிரதேசசெயலாளர் உங்கள் வேலையைப்பாருங்கள் என்று கூறியுள்ளனர். இந்த அடாவடித்தனத்தை ஒருசிலர்தான் செய்கின்றனர். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களை நாம் குற்றம்சுமத்தவில்லை.இங்கு சண்டித்தனம் காட்டமுற்பட்டால் நாமும் காட்டுவோம்.நாம் இங்குதான் பிறந்தவர்கள். என்றார்.
பேசிக்கொண்டிருந்தபோது அங்கு குழப்பம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இருசாராரும் கலைந்து சென்றனர். பின்பு அங்க நிரப்பப்பட்ட மண் கனரக இயந்திரம்மூலம் அகற்றப்பட்டது.
இதற்கு முன்னர் குறித்த நபரால் கடலோர பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட மேற்குறித்த இடத்தில் மண் இட்டு அபகரிக்க முற்பட்ட போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு மண் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.