நாட்டில் இன்று முதல் இணையவசதிகளுடன் 2000 பிரதேச கற்றல்வளநிலையங்கள்!

நாட்டின் கல்வி வரலாற்றில் முதல்தடவையாக இன்று 2000 பிரதேச கற்றல்வள நிலையங்கள் ஆரம்பமாகின்றன. கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இணையவழிகல்வியினை முன்னெடுக்கமுடியாத மாணவர்களுக்காக இப்புதிய ஏற்பாடு இன்று ஆரம்பித்துவைக்கப்படுகிறது.
 
கோவிட் தொற்றானது தற்போது உலகின் பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.
 
இந்த நிலையில் இலங்கையிலும் கோவிட் தொற்று அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் பலரின் அன்றாட வேலைகள் ஸ்தம்பித்துள்ளன.
 
அத்துடன் மாணவர்களின் கல்வி நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் சில மாணவர்கள் நன்மையடைந்துள்ள போதும் பல மாணவர்கள் அதிலும் குறிப்பாக வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இவ்வனைத்திற்கும் பிரவேசிக்க முடியாத சிக்கல் நிலைமை நாட்டின் 12வீதம் அல்லது அதற்கு சற்று அதிகமான தரப்பினரைப் பாதித்துள்ளது.
 
இணையவழி கற்கைக்கு தேவையான ஸ்மார்ட் தொலைபேசி கணனி அல்லது மடிக்கணனி போன்றவை இல்லாமலும் அப்படியே அவை இருந்தாலும் கூட, வகுப்பினை மேற்கொள்வதற்கான DATA போடுவதற்கான பணம் இன்றி அவதிப்படும் நிலை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
 
பல மாணவர்கள் தமது பிரதேசங்களில் சமிக்ஞை தழுவல்நிலை (Coverage)இல்லாத காரணத்தால் பலமைல்தூரம் நடந்துவந்து பஸ்தரிப்புநிலையங்களிலும் வேறிடங்களிலும் கூரைகளிலும் அமர்ந்திருந்து கற்றதையும் ஊடகங்கள் வாயிலாக காணமுடிந்தது.
 
பயணத்தடை காரணமாக உழைப்பின்றி கால் வயிறு கஞ்சிக்கே அல்லல்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கு இணைய வழியான கல்வியானது எட்டாக்கனியாகவே உள்ளது.
 
அன்றாட கூலிக்கு வேலை செய்து வருபவர்களுக்கு இந்த பயணத்தடை பெரிய அடி எனும் நிலையில் அவர்கள் குடும்பத்திற்கு இணைய வழி கல்வி என்பது பேரிடியாகவே காணப்படுகிறது.
 
அதற்குப்பரிகாரமாக கல்வியமைச்சு இன்று(5)திங்கட்கிழமை முதல் பிரதேச கற்றல் வளநிலையங்களை அறிமுகப்படுத்தி பின்தங்கிய மாணவர்களுக்கு கற்றலை ஏற்படுத்த வசதிசெய்துள்ளது.
 
கொவிட் தொற்று காரணமாக நாட்டில் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இணைய வழியாக கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
கொவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக தற்போது பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இணையவழி தொலைக்கல்வி வழிமுறையினூடாக இடம்பெறுகின்ற போதிலும் பல்வேறான காரணங்களால் அந்த வசதிகளைப் பெறமுடியாத மாணவர்களுக்காக ‘பிரதேச கற்றல் நிலையங்களை’ நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இணையவசதிகளுடைய குறித்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.
 
அதற்கமைய இன்று(5) திங்கட்கிழமை முதல் நாடளாவியரீதியில் 2000 பிரதேச கற்றல்வள நிலையங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து செயற்படவிருக்கின்றன.அதற்கா சகல ஏற்பாடுகளையும் அந்தந்த மாகாண வலயக்கல்விப்பணிமனைகள் பூர்த்திசெய்துள்ளன.
 
மஹிந்தோதையா ஆய்வகங்கள், வணக்கஸ்தலங்களில் நடத்திச்செல்லப்படும் கல்வி நிலையங்கள், சமூக அரங்குகளில் நடத்திச் செல்லப்படும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற இணையவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத் தலைவர்கள், கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் குறித்த இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கொவிட் – 19 தொற்று நோய் நிலைமையின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படாமையின் காரணமாக தற்போது கற்றல் நடவடிக்கைகள் தொலைக்கல்வி/இணையவழி முறைமையிலேயே இடம்பெறுகின்றன. அதேவேளை குருகுலம், இ-தக்சலாவ மூலமாக பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 
 
இ-தக்சலாவ மூலமாக ஆசிரியர்களுக்கு ‘வர்ச்சுவல் வகுப்பறை’ உருவாக்கப்பட்டு கல்வியைப் பெறுவதற்கான கற்றல் முகாமைத்துவ கட்டமைப்பின் மூலமாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-தக்சலாவ நிகழ்ச்சியில் 65000 பாட அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை ஒரு நாளைக்கு சுமார் 2½ இலட்சம் பேர் இதற்குள் பிரவேசித்தும் வருகின்றனர். கடந்த மாதம் 3.5 மில்லியன் பேர் இதற்குள் பிரவேசித்திருந்தனர்.
 
குருகுலம் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ‘ஐ அலைவரிசை’ ஊடாக சிங்கள மொழியிலும் ‘நேத்ரா அலைவரிசை’ ஊடாக தமிழ் மொழியிலும் செயற்படுத்தப்படுகின்றது. ஒரு நாளைக்கு 16 மணித்தியாலங்கள் என்ற வகையில் 05 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக தரம் 03 தொடக்கம் உயர் தரம் வரையிலான சுமார் 5000 பாடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இ-தக்சலாவ நிகழ்ச்சியை பயன்படுத்துவதற்கு எதுவிதமான கட்டணமும் அறவிடப்படுவதில்லை. மேற்படி இணையதள மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‘கல்வி பண்புத்தர அபிவிருத்தி மற்றும் தேசிய கல்வி நிறுவனம்’ என்பவற்றின் முழுமையான தரப்படுத்தலுக்கமைவாக மேற்கொள்ளப்படுகின்றது.
 அத்துடன் மாகாண, கோட்டகல்வி, பாடசாலை மற்றும் வகுப்புக்கள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக பெருமளவிலான நிகழ்ச்சிகள் உரிய விடயதான பணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படுகின்றன. எனினும் இவ்வனைத்திற்கும் பிரவேசிக்க முடியாத சிக்கல் நிலைமை நாட்டின் 12மூ அல்லது அதற்கு சற்று அதிகமான தரப்பினரைப் பாதித்துள்ளது.
அதனடிப்படையில் கல்வி அமைச்சானது, பிரதேச கற்றல் நிலையங்களை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 17 ஆம் திகதி சகல மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக சிறு குழுக்களாக ஒன்றுகூடக் கூடிய இடங்களில் கிராமிய ரீதியாக ஆரம்பிப்பதற்கு கல்வி மறுசீரமைப்புஇ திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுஇ மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திஇ முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. 
 
 அந்த நிலையங்கள் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரையில் திறந்து வைக்கப்படவுள்ளன. அந்த நிலையங்கள் ஆகக் குறைந்தது 10 கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப் கணினிகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதன் செயற்பாடுகள் பற்றியதான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வலய மட்டத்திலும் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்கள் மாகாண மட்டத்திலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் மீளத்திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.
 
அதற்கமைய பாடசாலைகள் திறக்கப்பட முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
 
50 மாணவர்களுக்கும் குறைவான 1439 பாடசாலைகள் 50 தொடக்கம் 100 மாணவர்கள் வரையான 1523 பாடசாலைகள் என 2962 பாடசாலைகளை மீளத்திறக்க உத்தேசித்திருப்பதாகவும் சுகாதார நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றவுடன் இறுதி முடிவை எடுப்பதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
 
அதன்படி 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மறுபுறம் நாட்டின் 10 மாவட்டங்களில் உயர் வலுவுடைய தொலைத் தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள கிராமிய பிரதேசங்களில் இந்த தொலைத் தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
 
ஒன்லைன் மூலம் கற்றுவரும் மாணவர்களுக்கு எந்தவித தடையும் இன்றி இலகுவான முறையில் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
 
இந்தப் பிரதேசங்களில் முதலில் தொலைத் தொடர்பாடல் கோபுரங்கள் நிறுவப்பட வேண்டும் என்பது பற்றி கவனம் செலுத்துமாறு தான் இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் பாடசாலைகள் முறைப்படி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் இத்தகைய கற்றல்வள நிலையங்களை ஆரம்பித்து நடாத்துதல் வரவேற்புக்குரியது.
 
வி.ரி.சகாதேவராஜா  
 
 

Related posts