தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படுகின்ற விஞ்ஞான ஆராய்ச்சி (Science Research Project) போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானாவின் செயற்றிட்டம் முதல் 20 செயற்றிட்டங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிக்காக நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட செயற்றிட்டங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. அதேவேளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இருந்து 04 செயற்றிட்ட வரைபுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றில் 03 செயற்றிட்ட வரைபுகள் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பாத்திமா ஷைரீன் எனும் மாணவியின் ஒரு தனிநபர் திட்டமும் மற்றும் ஒரு குழு திட்டமும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த போட்டிக்காக கடந்த 2018 ஒக்டோபர் 10 மற்றும் டிசம்பர் 13 ஆகிய தினங்களில் Institute of Engineers Sri Lanka வில் பயிற்சிப் பாசறைகள் நடாத்தப்பட்டன.
அதன் பின்னர் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தேசிய விஞ்ஞான மன்றத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பங்குபற்றிய 54 செயற்றிட்டங்களில் 20 செயற்றிட்டங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இப்போட்டிக்கு நடுவர்களாக கடமையாற்றிய கொழும்பு பல்கலைக்கழக மற்றும் களனி பல்கலைக்கழக பேராசிரியர்களால் இவை தெரிவு செய்யப்பட்டன. இவற்றுள் ஒன்றாகவே ‘கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் நிலக்கீழ் வெப்பநிலையில் கட்டடங்களினால் ஏற்படும் நகர்புற வெப்பத்தீவின் தாக்கம்’ எனும் தலைப்பில் பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானாவினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி ஆசிரியர் எம்.ஏ.முஹம்மட் றியாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.ஏ.எம்.என்.எம்.அதிகாரி அவர்களின் மேற்பார்வையிலும் இச்செயற்றிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவிருக்கும் Poster Presentation போட்டியில் வெற்றிபெறும் Top 10 Winners இலங்கையில் நடாத்தப்படும் சர்வதேச அறிவியல் போட்டிளோடு இணைந்த ஒரே ஒரு போட்டியான Sri Lanka Science and Engineering Fair (SLSEF) யில் பங்குபற்ற முடிவதுடன் அமெரிக்காவில் இடம்பெறும் Intel International Science and Engineering Fair (ISEF) யில் பங்குபற்ற கூடிய வாய்ப்புள்ளது.
கல்லூரியின் பிரதி அதிபர் நதீரா, விஞ்ஞான பாட இனைப்பாளர்- ஆசிரியை ஜீவைரீயா ஆகிய இருவரும் இம்மாணவியின் ஆய்வு செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாம்.எஸ்.மௌலானா மற்றும் அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.