மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் நீர் வழிந்தோடும் அரச காணியை அத்துமீறி பிடிக்க முற்பட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்லடிப் பாலத்திற்கு அருகில் நீண்டகாலமாக அரச காணியாக குறிப்பிடப்பட்டிருந்த ஒரு காணிக்குள் வந்தவர்கள் குறித்த காணிக்குள் வேலி அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த காணியில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியென அடையாளப்படுத்தப்பட்டிருந்த பதாகையினை உடைத்துவிட்டு குறித்த காணியை வேலியிட சிலர் முயற்சித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் நடைபெற்ற அத்துமீறல் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கு வந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.
மேலும்,குறித்த காணியை அடைத்து அதனை கொழும்பில் இருந்து வருகைதந்த வேறு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை குறித்த நபர் மேற்கொண்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, அந்தப் பகுதியூடாகவே மழை காலங்களில் காத்தான்குடி தொடக்கம் பல பகுதிகளின் வெள்ளநீர் நீர் வழிந்து மட்டக்களப்பு வாவிக்குள் செல்வதாகவும், இதனை அடைத்தால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.