பாராம்பரியமிக்க காரைதீவு பிரதேசசபையானது தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வசமிருக்கவேண்டுமானால், நாம் ஸ்ரீல.மு.காங்கிரஸ் ஆட்சிக்கு குறிப்பாக மேயரின் பட்ஜட்டுக்கு ஆதரித்து வாக்களிக்க தயாராகவுள்ளோம். இதில் மாறுபட்டகருத்துக்கிடமில்லை. மு.கா.- த.தே.கூட்டமைப்பு உறவென்பது காலத்தின் கட்டாயதேவை.அதனையே எமது தலைமைகளும் அறிவுறுத்தியிருக்கின்றன.அதற்காக எமது உயிருள்ளவரை அதனைக்கட்டிக்காப்போம்.
இவ்வாறு கல்முனைமாநகரசபையில் அதிகூடிய மூன்று தடவைகள் உறுப்பினராக தெரிவாகிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்அதிசிரேஸ்டஉறுப்பினர் லயன் அழகக்கோன் விஜயரெத்தினம் அறைகூவல் விடுத்தார்.
கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேசசபையின் எதிர்வரும் பட்ஜெட் வாக்கெடுப்பு தொடர்பாக கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:வரலாற்றில் நாம் பல பாடங்களை கற்றறிந்திருக்கிறோம். அந்த அனுபவங்களை கற்றறிந்த பாடமாகக்கொண்டு எதிர்காலத்தை வெற்றிகரமாக எதிர்நோக்கவேண்டும். விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை . கெட்டுப்போனவன் விட்டுக்கொடுத்ததில்லை.
பல்லினசமுகம் வாழ்கின்ற எமது அம்பாறை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சிசபைகளில் ஆட்சிபீடத்தில் ஏதோஒருவகையில் ஒரு தமிழரோ அல்லது ஒரு முஸ்லிமோ தலைவராகவிருப்பார். அவருக்கு எமது அங்கீகாரத்தை வழங்குவதனூடாக மக்களின்வரிப்பணத்தை முறைப்படி பயன்படுத்த சந்தர்ப்பமளிக்கப்படுகின்றது. அங்கிகாரத்தை வழங்காமல் நாம் அவரிடம் எவ்வித அபிவிருத்தியையோ ஆதரவையோ எதிர்பார்க்கமுடியாது.
அந்தவகையில் காரைதீவு பிரதேசசபை த.தே.கூட்டமைப்பு வசமுள்ளதை அறிவோம்..அதற்கு மு.காங்கிரஸ் ஆதரவளித்து வந்துள்ளதை அறிவோம். அதுபோல் நாமும் கடந்த தடவையும் கல்முனையில் மாநகரமேயருக்கு ஆதரவளித்தோம்.சிலபல வேலைகளைச்செய்தோம். ஆரம்பத்தில் முரண்பட்டு சாதித்ததொன்றுமில்லை.
கல்முனைமாநகரசபையில் த.தே.கூட்டமைப்பைப்பொறுத்தவரை அதிசிரேஸ்ட உறுப்பினர் நான். எமது தலைமைப்பீடம் என்னிடம் இம்முறையும் மு.காவை ஆதரிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவர்கள் நாம். அதைவிட எமக்கொரு தார்மீகபொறுப்புமுண்டு.
நாம் இங்கு கல்முனையில் மு.கா. மேயரை ஆதரித்தால் அங்கு காரைதீவில் த.தே.கூட்டமைப்பு ஆட்சிக்கு மு.கா ஆதரவளிக்கும். இதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை. ரகசியமுமில்லை. ஒத்தால் வாழலாம் எத்தால் வாழமுடியாது.. எனவே எமது எதிர்காலத்தை தீர்கக்தரிசனத்தோடு எதிர்கொள்ள இருசாராரும் பரஸ்பரம் புரிந்துணர்வோடு சகோதரமாக பழகிக்கொள்ளவேண்டும் அத்துடன் ஆதரவளிக்கவேண்டும். என்றார்.