அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு முதலாவது நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரியாக பிரதம இன்ஸ்பெக்டர் எஸ்.திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தரமுயர்த்தபட்டு திறந்துவைக்கப்பட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்தின் முதலாவது நிரந்தர பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் நேற்று(30) திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமையைப் பொறுப்பேற்ற கையோடுஅவர் காரைதீவு பிரதேசத்தின் முதல்வரான காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலை அவரது அலுவலகத்திற்குச்சென்று சந்தித்தார்.
சமகால கொரோனா சூழலில் காரைதீவுக்கிராமத்தின் பாதுகாப்பு பற்றி விலாவாரியாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக போதைப்பொருள்கள் கடத்தப்படும் அல்லது விற்கப்படும் களமாக காரைதீவு உள்ளகவீதிகள் இருப்பதால் அதனையிட்டு கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என தவிசாளர் கேட்டுக்கொண்டதற்கு அவர் பூரண சம்மதம் தெரிவித்தார்.
இரவுவேளைகளில் மக்களின் பாதுகாப்புக்காரணமாக விசேட ரோந்து நடாத்தவும் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டது.
மொத்தத்தில் காரைதீவுக்கிராமத்தின் பாதுகாப்பு கருதி தவிசாளர் பூரண ஒத்துழைப்பை தமக்கு வழங்கவேண்டுமென புதிய பொலிஸ பொறுப்பதிகாரி திலகரத்ன கேட்டுக்கொண்டார்.
சட்டவிரோத செயற்பாடுகள் நீதிக்குப்புறம்பான செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை முறையாக அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் பாதுகாப்புக்காக பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்பை நல்குவதாக தவிசாளர் ஜெயசிறில் அவரிடம் உறுதியளித்தார்.