எதிர்வரும் 29ஆம் திகதி கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகுவதையிட்டு, பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவசர அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
சகல பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, கல்வி அமைச்சின் 25ஃ2019ஆம் இலக்க சுற்றுநிரூபத்தை கவனத்திற்கொள்ளுமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எனவும் இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாதுகாப்பு நடவடிக்கைகளானவை,
சகல பாடசாலைகளிலும் விசேட பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதிபர் தலைமையிலான அக்குழுவில் ஆசிரியர், பெற்றோர, பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
பாடசாலை வகைக்கேற்ப குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.
பாடசாலை ஆரம்பமாக முன்னர் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (28) பாடசாலை வளாகம் முழுமையாக இக்குழுவினரால் சோதனை செய்யப்பட வேண்டும்.
தினமும் காலை 7மணிக்கு முன்னர் பாடசாலைச் சூழலை இக்குழுவினர் முற்றாகச் சோதனை செய்ய வேண்டும். வகுப்பறைகள், சிற்றுண்டிச்சாலைகள், வாகனத் தரிப்பிடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட சகல கட்டிடங்களையும் மரங்கள், பூச்சாடிகளையும் இக்குழுவினர் சோதனை செய்ய வேண்டும்.அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் வாகனத் தரிப்பிடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, இடையில் வாகனங்களை எடுத்துச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும். மிக அவசியமாயின் அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் வாகனங்கள் எடுத்துச் செல்லப்படலாம்.
பாடசாலை ஆரம்பமாகி முடியும்வரை பாடசாலை பிரதான வாயில் முதல் ஏனைய சகல நுழைவாயில்களும் மூடப்பட வேண்டும். இடையில் யாராவது உள்ளே வருவதாகவிருந்தால், அதிபரின் அனுமதியுடன் வந்துசெல்ல முடியும். ஆனால், அவர்களின் வாகனங்கள் உள்ளே எடுக்க அனுமதிக்கக்கூடாது.
அதிபரின் தொலைபேசி இலக்கம், பாடசாலை பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, அவசியம் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் குறித்த இலக்கத்தோடு தொடர்புகொண்டு தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
பாடசாலையில் பாவிக்கப்படாமலுள்ள அறைகள், கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும்.
பாடசாலை முடிவடையும் நேரம் முக்கியமானது என்பதோடு, அவ்வேளையில் மாணவர்கள் கூட்டமாகச் செல்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. ஒவ்வொரு வகுப்பாகவே மாணவர்கள் வெளிச்செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் வெளியேறிய பின்னரும் வீதிகளில் கூட்டமாகச் சைக்கிளில் செல்வதையோ, கூட்டமாக நடந்துசெல்வதையோ தவிர்த்தல் சிறந்தது.
மாணவர்களை அழைத்துச்செல்ல வரும் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் வாகனங்கள் பாடசாலைக்கு அப்பால் 100மீற்றர் தொலைவில் தரித்து நிற்க வேண்டும். தேவைப்படின் பாடசாலை முடியும் வேளையில் சுமார் 10நிமிடமாவது வீதிப் போக்குவரத்தை பொலிஸாரின் உதவியை நாடலாம்.
தேவை ஏற்படும் பட்சத்தில் அதிபர்கள் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளையும் மேற்கொள்ள முடியும்.
பாடசாலைகளை அண்டிய இடங்களில் கூவி விற்கும், நடமாடும், சில்லறை வியாபார ஊர்திகள் மற்றும் வாகனங்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
பாடசாலைகளில் முக்கிய விழாக்களை, கூட்டங்களை சமகாலத்தில் தவிர்த்தல் சிறந்தது.
சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டுள்ள பாடசாலைகள் அவற்றை இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாடசாலைச் சூழலில் யாராவது இனந்தெரியாத, சந்தேகத்திற்குரிய நபர்கள் உலாவினால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு நடக்குமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்ளதாக அச்சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.