கொரோனாத் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு நேற்றுமுன்தினம் நாவிதன்வெளி மத்தியமுகாம் 03 ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறபப்பாக நடைபெற்றது.
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ தி.கு.தேவகுமார் குருக்கள் (கிரியா கலாமணி தட்புருஷ சிவாச்சாரியார் தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், உதவிப்பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள் , உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
இப்பிராத்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் “ஆலயதரிசனம்” நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது