கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
சூடுபத்தினசேனையில் புதைப்பதற்கு எந்த விதமான பணமும் அறவிடுவதில்லை ஆனால் குறித்த உடலத்தை எரிப்பதாயின் மன்னம்பிட்டியில் உள்ள தகன சாலைக்கு 12 ஆயிரம் கட்டவேண்டிய நிலையுள்ளது. அதனையும் கட்ட கூடிய வசதி இல்லாதவிடத்து அரசாங்கத்தினால் இலவசமாக எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கொரோனாவால் மரணித்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் தங்களது செலவிலேயே அந்த சடலங்களை அடக்கம் செய்வதாகவும் தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் கொரோனாவால் இறந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு பணம் அறவிட்டமை வேதனைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறு யாரும் பணம் வசூலிப்பதாக இருந்தால் உடனடியாக தனது கவனத்துக்கு கொண்டு வரும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .