ஒற்றுமை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று சர்வதேசம் தொடர்பில் பேசுகின்றார்கள், இவர்களுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை இருக்கின்றதா

 ஒற்றுமை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று சர்வதேசம் தொடர்பில் பேசுகின்றார்கள், இவர்களுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை இருக்கின்றதா எனும் கேள்வியை முதலில் இவர்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டுமென சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடகிழக்கு இணைப்பு பேசுவார்கள் பிள்ளையானுடன் பேச வேண்டும் என்பார்கள் பின்னர் பேச முடியாது என்பார்கள், தற்போது விசேடமாக சர்வதேசம் பற்றி பேசுகின்றார்கள். இவர்களுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை இருக்கின்றதா என்று கேட்க வேண்டும். ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என மேடையிலே கத்துகின்றவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு நான்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் அவர்கள் எழுதியுள்ளதிற்கு போட்டியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னால் முதலமைச்சர் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றாக பல கூறுகளாக பிரிந்து கடிதங்களை அனுப்பியுள்ளார்கள்.

இவர்கள்தான் இங்கு மட்டக்களப்பிற்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள். யார் முதல் ஒன்று சேர வேண்டும் என்பதை அவர்கள் முதல் சிந்திக்க வேண்டும். 

அதுபோன்று அரசாங்கம் என்பது அதனுடைய ஒருமித்த நிலைப்பாட்டை  ஒருமித்த குரலில் ஒன்றாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றது.

எதிர்கட்சி பல விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும் இந்த விமர்சனங்களிலே குறிப்பாக மறைந்திருக்கும் விடையங்களை ஆழமாக பார்க்க வேண்டும். நாங்கள் பெரும் தொழிலாளிகளை விடுத்து முதலாளிகளை காக்கும் அரசாங்கம் அல்ல, சாதாரண கிராமபுற மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் என்ற அடிப்படையிலே அரசாங்கமும் நாங்களும் சாதாரண மக்களுடைய வாழ்க்கையிலே அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் கஸ்டம் இல்லாமல் வாழ்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் அதற்காகத்தான் பால் உற்பத்தி, மீன் உற்பத்தி போன்ற பலவிதமான உள்ளுர் உற்பத்திகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களை விமர்சிப்பதை விடுத்து பாமர மக்கள் அல்லது விலையெற்றத்தால் கஸ்டப்படுகின்ற மக்கள் பக்கம் இருக்க வேண்டும். அதே போன்றுதான் மண்மாபியாக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எங்களுடைய எதிர்கட்சி உறுப்பினர் அடிக்கடி பேசுகின்ற காரணத்தால் மட்டக்களப்பில் ஏதோ தங்கச்சுரங்கம் இருப்பது போல் தொற்கில் இருக்கின்ற அனைத்து மண்வர்த்தகர்களும் இந்தப் பகுதியிலே வந்து வட்டமிடுவதும் இங்கிருக்கும் மண்ணை வியாபாரம் செய்வதற்கு தூண்டுகின்ற விடயமாக இருக்கின்றது.

எழுபது எண்பது வருடங்களாக பாராளுமன்றத்திலே கூக்குரல் எழுப்பியவர்கள் இன்று எங்களுக்காக அல்லது பிள்ளையானுக்காக பாராளுமன்றத்தில் பேசுவது அதிகமாக இருப்பது தொடர்பில் எண்ணி கவலையடைகின்றேன். மக்களுடைய பிரச்சனைகளை பேசி மக்களுக்கான தீர்வை காணும் விடையத்திலேயே முயற்சி எடுக்க வேண்டுமே தவிர அல்லது அவர்கள் சொன்னது போல தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான  ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென எதிர்கட்சியினரிடம் இவ்விடத்திலே அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் அன்மையில் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பில் 50 இரத்தமாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் அதிகமானோருக்கு டெல்ரா பிரல்வு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த அடிப்படையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related posts