கொள்வனவின் போது மக்கள் அவர்களுக்குத் தெரியாமலே அதிக விலை கொடுக்கின்றார்கள்…
(மட்டக்களப்பு மாநகர முதல்வர் – தி.சரவணபவன்)
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும்பாலும் தாம் வாங்கும் பொருட்களுக்கு, மேலதிகமாக பணம் செலுத்தி அவற்றைக் கொள்வனவு செய்து வருகின்றார்கள். எனவே நுகர்வோர் நலன் கருதி மட்டக்களப்பு மாநகர அதிகார எல்லைக்குள் இலத்திரனியல் பெயர்ப் பட்டியல் மற்றும் பொதுத் தராசு போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையினை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று முதலாவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதன் ஓர் அம்சமாக மட்டக்களப்பு பொதுச் சந்தையில் இலத்திரனியல் விலைப்பட்டியல் திறந்துவைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுகர்வோர் அதிகார சபையின் புள்ளிவிபரங்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமகனொருவர் 1000 ரூபாய்க்குப் பொருளை கொள்வணவு செய்யும் போது அதில் 107 ரூபாய் வரை அதிகமாக செலவு செய்கின்றார். இது எங்களது பொது மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது.
எனவே இதனை நாங்கள் நிவர்த்தி செய்யும் நோக்குடன் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். அதனடிப்படையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு சட்டத்திற்கு முறானான வகையில் செயற்படும் வியாபார நிறுவனங்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் மேலும் தொடராத வண்ணம். ஒரு சில ஒழுங்கு முறைகளை மாநகர சபையானது நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாகவே எங்களது பொதுச் சந்தையை ஒரு நவீன சந்தையாக மாற்றி. இலத்திரனியல் பெயர்ப் பட்டியல் ஒன்றை இன்று நிறுவியும் உள்ளோம்.
இதில் ஒவ்வொரு நாளும், பொருட்களின் விலை மாற்றங்களைத் தரவேற்றம் செய்யும் வகையில் விலைக் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளினால் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விலைப்பட்டியலோடு ஒரு பொதுத் தராசும் சந்தை வாசலின் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதே நேரம் மக்கள் சந்தையில் கொள்வணவு செய்த பொருட்களை அந்த பொதுத் தராசில் வைத்து சாரிபார்த்துச் செல்லலாம். என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்செயன், மாநகரசபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.