எவன்காட் மெரிடைம் சர்விஸர்ஸ் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தை நடத்திச் சென்று அரசாங்கத்திற்கு ஆயிரத்து நூற்றி நாற்பது கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் முதலாவது சந்தேகநபர் கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேபனை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை தடுக்கும் வகையில், தற்காலிக தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.