பெரியநீலாவணையில் கோரவிபத்து முறிவுவைத்தியர் நமசிவாயம் ஸ்தலத்திலே பலி ஏழுவயது இரட்டைச் சகோதரர்கள் படுகாயம்
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்து கஞ்சா மீட்பு
பெரியநீலாவணை பிரதானவீதியில் இன்று பகல் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸதலத்திலே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த இரு இரட்டைச்சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பகல் பெரியநீலாவணை பிரதான வீதியில் நடைபெற்றுள்ளது. விபத்தில் பெரியநீலாவணையில் எலும்பு முறிவு வைத்தியராக சேவையாற்றும் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த செல்லத்தம்பி நமசிவாயம்(68வயது) என்பவரே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த இரட்டைச்சகோதர்களான வி.தேமீஜன்(7வயது) வி.வேணுஜன்(7வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனையில் இருந்து வந்த கனராக வாகனம் சாரதியின் கவனக்குறைவினால் பாதையை விட்டுவிலகி எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. கனரக வாகனத்தின் அடியில் முச்சக்கரவாகனம் நசுங்குண்ட நிலையில் சம்பவ இடத்திலே முறிவுவைத்தியர் பலியாகியுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் பெரியநீலாவணையில் பதட்டத்தை ஏற்படுத்தியது. அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்கள் ஆவேசப்பட்டவர்களாக காணப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கனரகவாகனச் சாரதியை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர். விரைந்து வந்த பொலிஸார் சாரதியை கைது செய்தனர். அவ் விடத்தில் தொடர்ந்தும் பதட்டம் நிலவியது.
இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்திய கனரகவாகனத்தை முற்றுகையிட்டு சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்த சிறிதளவு கஞ்சாவை மீட்டுள்ளதுடன். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.பிரபல முறிவு வைத்த்தியர் நமசிவாயத்தின் இழப்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது