(எஸ்.குமணன்)
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று விடுதலை செய்தது.
கடந்த ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் பாண்டிருப்பு பகுதியில் வைத்து கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் வழக்கு தாக்கல் செய்து தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து குறித்த வழக்கு புதன்கிழமை(18) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்காத நிலையில் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் வாராந்தம் சனிக்கிழமைகளில் 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் கட்டளையிட்டார்.
மேலும் இச்சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பினரின் வழக்கினை பயங்கரவாத தடை சட்டத்தில் இருந்து நீக்கி சாதாரண சிவில் வழக்கு ஊடாக முன்னெடுக்கமாறு
கடந்த தவணை கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.