சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பாதை அகற்றப்பட்டுள்ளது

அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மீனவர் பாதை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அதிகாரிகளது அறிவுறுத்தல்களுக்கமைவாக இன்று(05) அகற்றப்பட்டுள்ளது.
 
அட்டாளைச்சேனை கோணவத்தை பிரதேசத்தில் உள்ள கடற்கரைப் பகுதியில்  கடந்த சனிக்கிழமை(30) மாலை மீனவர்களுக்கான பாதையொன்று கிறவல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இவ்வீதியினை அமைக்கும் வகையில் தனவந்தர்கள், மீனவர்கள் மற்றும் விளையாட்டுக் கழகம் போன்றவற்றின் உதவி பெறப்பட்டிருந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட இவ்வீதியே இன்று(05) அகற்றப்பட்டுள்ளது. இவ்வீதியினை மீளவு அமைக்கும் வகையில், உரிய தரப்பிரனரின் அனுமதினைப் பெறவுள்ளோம் என இப்பகுதி மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இப்பகுதி மீனவர்கள் துறைமுகத்தில் மணல் நிரம்பிய காரணத்தினால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட படகுகளும் சிறிய கரைவலை தொழிலுக்கான வள்ளங்களும் கடந்த சில மாதங்களாக அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் தரித்து வைக்கப்பட்டு மீனவர்கள் தமது தொழில் செயற்பாட்டினை இப்பகுதியில் முன்னெடுத்து வருகின்றனர்.
இம்மீனவர்கள் தமது படகுகளுக்கான எரிபொருள் உள்ளிட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்கு வேண்டிய பொருட்களை கொண்டு செல்வதற்கும், கடலில் பிடிக்கப்படுகின்ற மீன்களை தரைக்கு கொண்டு செல்லவுமென மணற்பாங்கான இப்பகுதியில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள மீனவர்கள் பல்வேறான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இம்மீனவர்களின் சிரமங்களை போக்கும் வகையில், வள்ளங்கள் தரித்து வைக்கப்படும் பகுதி வரை அமைக்கப்பட்ட இவ்வீதியானது கரையோரம் பேணல் பாதுகாப்பு திணைக்களத்தினரின் உரிய அனுமதி பெறப்படாமையால் இவ்வீதி அகற்றப்பட்டமை குறிபிப்பிடத்தக்கது.

Related posts