சமகால பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எமது இடமாற்றத்தை ரத்து செய்யவும். கல்முனை வலய 55 ஆசிரியர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாணத்தில் கல்முனை வலயத்தில் இருந்து அண்மையில் இடமாற்ற கடிதங்களை பெற்ற 55 ஆசிரியர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் எங்கள இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கூறி அந்த இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
 
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசிஸ் இடம் குறித்த ஆசிரியர்கள் அந்த மகஜரை கையளித்துள்ளனர்.
 
 இதுதொடர்பாக இணைப்பாளர் அப்துல் அஸீஸ் ,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக அறிவித்தார் .
 
பதிலுக்கு ,”நாங்கள் முறைப்படி விண்ணப்பம் கோரி இந்த இடமாற்றத்தை செய்து இருக்கிறோம். பொருத்தமில்லாதவர்கள் மேன்முறையீடு செய்தால் அதனை கவனிக்கிறோம். மேலும் மாகாண கல்விச் செயலாளர் உடன் கலந்துரையாடி பின்னர் எதையும் கூற முடியும் “என்று அஸீஸிடம் பதிலளித்திருக்கிறார்.
 
 குறித்த 55 ஆசிரியர்களும் கையளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
 
கிழக்கு மாகாணத்தில் இன்றைய மோசமான கால கட்டத்தில் எந்த ஒரு வலயத்திலும் இவ்வாறான மனிதாபிமான அற்ற இடமாற்றம் இடம்பெறவில்லை. ஆனால் கல்முனை வலயத்தில் மாத்திரமே தொண்ணூத்தி எட்டு பேர் ஆசிரியர் இடமாற்றத்திற்கு குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதியில் 55 பேர் மாத்திரமே இந்த இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் ,இன்றைய எரிபொருள், பொருளாதார நெருக்கடி போன்ற பாரிய பிரச்சினைகள் நிலவும் கால கட்டத்தில் எங்களை 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய இடமாற்றம் வழங்கப்பட்டது. 
 
இன்றைய சூழலில் அவ்வளவு தூரம் பயணம் செய்து எம்மால் திருப்தியான கற்பித்தலை செய்ய முடியாது உள்ளது.
 
 குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆசிரியர்களும் இந்த 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரம் சென்று கற்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
 மனிதாபிமானம் கருதி இந்த இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோருகின்றோம்.
 
 என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 எமது நிருபர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ள நாயகம் அவர்களோடு தொடர்பு கொண்டு கேட்ட போது… 
 
கல்முனை வலயத்தில் ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றார்கள். இதனை சமநிலைப்படுத்தும் நோக்கி ல் எனக்கு கல்விச் செயலாளர் பணிப்புரை விடுத்தார். அதற்கமைய இவ் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது . வெளி வலயம் சேவை செய்யாத ஆசிரியர்கள் ,நீண்டகாலம் ஒரு பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவர்களை இனங்கண்டு 55 பேரை இடம் மாற்றுவதற்கு நாங்கள் இடமாற்ற கடிதங்களை குறித்த ஆசிரியர்களுக்கு அனுப்பி இருந்தோம். அதில் பலர் மேல்முறையீடு செய்தார்கள் . அவ்வாறு மேன்முறையீடு செய்தவர்களில் முப்பத்தி எட்டு(38) ஆசிரியர்களை அவர்களது மேன்முறையீட்டை ஏற்று, அவர்களது விருப்பு கிணங்க ஆனால் வலயத்துக்கு வெளியே அருகில் உள்ள பாடசாலைகளுக்கு நியமித்திருந்தோம். அந்த 38 பேரும் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். எனவே, எஞ்சிய தொகையை ஆசிரியர்களே இப்பொழுது இந்த இடமாற்றம் இரத்தூசெய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதனையும் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் உடன் கலந்துரையாடிய பின்னரே தெரிவிக்க முடியும். என்றார்.

Related posts