தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கமைய ஒன்பது மாகாண சபைகளிலும், 341 உள்ளூராட்சி நிறுவனங்களும் சேவை செய்யும் ஊழியர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி வரவு திட்டத்தை தோல்வியடைய செய்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பாரிய சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்தமையினால் அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. எனினும் அப்பாவி அரச ஊழியர்களுக்கே பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.