சரியான திட்டமிடல் இல்லாத எரிபொருள் வழங்கும் நடைமுறை சுகாதாரப் பணியாளர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு

எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தினால் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட பல வைத்திய சேவைகள் தாமதமாக நடைபெறுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கமும் (GMOA) இணைந்து முன்வைத்த கருத்திற்கமைவாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

 

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த நடைமுறையில் சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை. இந்த நடைமுறையை பெரிதும் வரவேற்கின்றோம். பாராட்டுகின்றோம். ஆனால் அதில் பாரிய சிக்கல் நிலை இருப்பதை இரு அமைச்சர்களும் மறந்துவிட்டார்கள்.

 

சுகாதார சேவைகளுக்கு எரிபொருள் வழங்க மாவட்ட வாரியாக 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் குறித்த நகரை அன்மித்ததாகவே இருக்கின்றது. அதுமாத்திரமன்றி சுகாதார ஊழியர்கள் பாவிக்கின்ற வாகங்களுக்கெற்ப வாராந்தம் அதிகபட்சமாக மோட்டார் கார்கள் மற்றும் ஜீப்களுக்கு 40 லீற்றரும், முச்சக்கரவண்டிகளுக்கு 15 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீற்றர் என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் பல பணியாளர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிலோ மீற்றர் தூரம் வந்து செல்லவேண்டிய நிலைமையும், அன்றைய தினம் கடமைகளுக்கு செல்ல முடியாமல் சொந்த விடுமுறையில் வரவேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமைக்கும் ஆளாகியுள்ளனர்.

 

குறிப்பாக, இந்த சலுகையைப் பெறவுள்ள சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை எரிபொருள் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சுகாதார நிறுவனம், ஊழியரின் பெயர், பதவி, தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன வகை மற்றும் பதிவு இலக்கம் ஆகியவற்றை நிறுவன தலைவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சமர்ப்பிக்கபட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையிலும் பாரியதொரு சிக்கல்நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது.  

 

ஏனென்றால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அன்மித்ததாக கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் வாகனங்களுக்கு முதலில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மிக அதிகமாகவே காணப்படுகின்ற அதேவேளை அடுத்த எரிபொருள் நிலையத்துக்கும் சென்று மீண்டு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனால் தூர இடங்களில் இருந்து வருகின்ற பணியாளர்களுக்கு சிலவேளைகளில் எரிபொருள் கிடைக்காமல் போய்விடும் துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்படலாம்.

 

இந்நிலைமையை தீர்க்கும் வகையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு பாஸ் நடைமுறையை அறிமுகப்படுத்தி அந்த பாஸினை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வழங்கிவிட்டு தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் திட்டத்ததை அமுல்படுத்து வேண்டும். அவ்வாறு அமுல்படுத்துவதன் மூலமே அதற்கான சிறந்ததொரு தீர்வை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் சுகாதாரப் பணியாளர்களுக்குள் பாரிய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

Related posts