உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனோடு சேர்ந்ததாக தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஈழ தமிழர்களும், துறை சார்ந்த விசேட நிபுணர்களுமான கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்கள் 20 பேரை கடந்த வாரம் பாலித்தீவுக்கு அழைத்து சென்றார். இவ்விதம் அழைத்து செல்லப்பட்ட பேராளர்களில் நாசா விஞ்ஞானிகள், வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர்கள், அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் ஒரு வார காலம் தங்கி இருந்து பாலித்தீவை சுற்றி பார்த்தார்கள். இவர்கள் பஸாக்கி கோவில், உளுவாது கோவில், கோ கஜா என்று சொல்லப்படுகின்ற யானை குகை, தனா லொட் கோவில், தாமன் அயூன், குணங்காவி கோவில்,உலுன் தனு பிரதான் கோவில், லுஹார் லெம்புயங் கோவில், திர்தா எம்புல் கோவில், சரஸ்வதி கோவில் ஆகியவற்றை பார்வையிட்டு தரிசனம் மேற்கொண்டனர்.
இதே போல அடுத்த மாதம் 15 ஆம் திகதி அளவில் 20 பேர் கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவை பாலித்தீவுக்கு அழைத்து செல்ல தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையம் ஏற்பாடு செய்து உள்ளது.
இந்தோனேசியாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய சிறிய தீவுகள் உள்ளன. இந்நாட்டில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக உள்ளபோதிலும் பாலித்தீவில் மட்டும் இந்துக்கள் அதிகமாக வாழ்கின்றனர்
இந்து மற்றும் பௌத்த வரலாற்று பின்னணிகளுடன் பிணைந்ததாக உள்ள பாலித்தீவு கடவுளின் தீவு, ஆயிரம் கோவில்களின் தீவு என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்றது. ஏனென்றால் இங்கு எங்கு பார்த்தாலும் ஆலய மயம்தான். 6200 கோவில்கள் பாலித்தீவில் அமைந்து உள்ளன என்று சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொரு கோவில் உள்ளது. 500 வருடங்களுக்கு முன்பு இந்து சமயம் எப்படி இருந்தது? என்பதை பாலியில் பார்க்கலாம் என்று உலகம் சுற்றிய தமிழரான ஏ. கே. செட்டியார் எழுதி உள்ளார். அதே போல உலகின் காலை பொழுதே பாலி, அதுவே உலகின் கடைசி சொர்க்கம் என்று பண்டிதர் ஜவஹர்லால் நேரு புகழ்ந்து உள்ளார்.
பாலித்தீவுக்கு ஆண்டு தோறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பதும் இவர்களை வரவேற்க ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அறைகள் ஆயத்தமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.