சாய்ந்தமருது மக்களாகிய நாம் இன்று நேற்றல்ல எப்போதும் மஹிந்த அரசை நேரடியாக எதிர்ப்பவர்கள் : இனி எமது தெரிவு நமது தலைவராகவே இருக்க வேண்டும் – ஹுதா உமர்.

அக்கரைப்பற்று எனும் ஒரு ஊரின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல ஏ.எல்.அதாவுல்லா எனும் நபர். அவர் கிழக்கு மாகாணத்தின் ஒரு ராஜாவாக இருந்தவர். அவர் தனக்கு கிடைத்த அமைச்சர் பதவியை பயன்படுத்தி சகல பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்தவர் என்பதையும் தாண்டி சில பிரதேச மக்களின் நீண்டநாள் உரிமை கனவுகளையும் நிஜமாக்கி கொடுத்த ஆளுமை மிக்க தலைவர். அவரை மீண்டும் அதிகார கதிரைக்கு கொண்டுவரவேண்டியது அம்பாறை வாழ் மக்களின் தேவையாகும் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும் தெற்காசிய சமூக அபிவிருத்தி ஸ்தாபன பணிப்பாளருமான அல்-ஹாஜ் யூ.எல்.நூருல் ஹுதா  தெரிவித்தார். 
 
 (09) மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் தனது உரையில், 
 
நாம் வாக்களிக்காமல் நிராகரித்தாலும் எம்மை மதித்து சாய்ந்தமருது வைத்தியசாலை சுனாமியால் பாதிக்கப்பட்ட போது அதை பிரதான வீதியில் அமைக்க கடுமையாக பாடுபட்டு இன்று அந்த வைத்தியசாலை கம்பீரமாக எமது மண்ணில் தலைநிமிர்ந்து நிற்க்க காரணமானவர் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களே. அதுமாத்திரமின்றி எமது பிரதேச வீதிகளில் மிக அதிகமான அளவு வீதிகளை அபிவிருத்தி செய்தது முதல் எமது பிரதேச செயலகத்திற்கான கட்டிடம், பாடசாலை கட்டிடங்கள் என இன்னும் பல அபிவிருத்திகளை இந்த மண்ணுக்கு செய்தவர் என்றால் அது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களையே சாரும். 
 
இப்போது கொழுந்து விட்டு எரியும் நகரசபைக்கான இந்த போராட்டத்தை ஆரம்பிக்க முன்னரே எமக்கான தேவையை முடித்துவைக்க தீர்வை தங்கத்தட்டில் தந்தபோது முஸ்லிம் காங்கிரசை நம்பி அதை நிராகரித்தோம். ஆனால் இன்று நாம் முஸ்லீம் காங்கிரசை நிராகரித்து போராடி கொண்டிருக்கிறோம். உண்மையும், சத்தியமும், தூரநோக்கு சிந்தனையும் கொண்டவர் அதாவுல்லா என்பதை காலம் எமக்கு நன்றாக பாடம் புகட்டியுள்ளது. 
 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, அதாவுல்லா போன்றோர்களும் இன்னும் பலரும் நகரசபையை துரிதகதியில் செய்துமுடிக்க எங்களுக்கு ஆணைத்தாருங்கள் என எம்மிடமே வந்து நேரடியாக கேட்டபோதும் நாங்கள் அவர்களை நிராகரித்து எமது மண்ணுக்கு நேரடியாக துரோகம் செய்த மாற்று அணியினரையே ஆதரித்தோம். பெரும்பான்மை இன மக்களின் கணிசமான வாக்குகளால் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் நாம் எமது மண்ணுக்கான உரிமையை பெற வாக்களிக்க வில்லை. இப்போது அவர்கள் விரும்பும் நேரத்தில் தான் தருவோம் என்றால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நாம் அவர்களை இன்று நேற்றல்ல எப்போதும் நேரடியாக எதிர்ப்பவர்கள். அவர்களை எதிர்த்து வாக்களித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எமது உரிமைகளுக்காக அவர்களிடம் பேச முடியும்.
 
எதிர்வரும் 10-20  வருடங்களுக்கு அசைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மை இன மக்களின் ஆதரவை கொண்டிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து சென்று எமது உரிமைகளையும், சலுகைகளையும் பெற நாம் இப்போதாவது ஒன்றிணைய வேண்டும். அதற்காக நமது மண்ணை எப்போதும் நேசிக்கும் ஒரு மக்கள் தலைவனை நாம் பலப்படுத்த முன்வரவேண்டும். பல்வேறு அபிவிருத்திகளை எமக்கு செய்த ஆளுமைகளை நாம் இவ்வளவு காலமும் நிராகரித்துவிட்டு பாட்டுக்கும் ஏனைய சில கவர்களுக்கும் சோரம்போகி பிழையான தீர்மானங்களையே எடுத்துள்ளோம். இனியும் பிழையான தீர்மானங்களை எடுத்துவிட்டு வீதிகளில் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பதை நன்றாக சிந்தித்து நமது தாய் மண்ணை நேசித்து மண்ணின் தாக்கம் தீர்க்க எம் மண்ணின் மீது மற்றும் இந்த அரசின் தலைவர்களிடம் நல்ல மரியாத்தையும், செல்வாக்கும் மிகுந்த கிழக்கின் தலைவனை நாட்டின் குரலாக மாற்ற முன்வரவேண்டும் என்றார். 

Related posts