மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் நலன் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் சிறுவர்கள் தொடர்பாக அர்ப்பணிப்புடன் உணர்வு பூர்மாக செயற்படுகின்றார்கள் என மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் பாராட்டுத் தெரிவித்தார்.
புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட சிறாரக்ளுக்கான சித்திரப் போட்டியில் பங்கு பற்றி திறமைகளைக் காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரனால் இன்று (12) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் சிறுவர்கள் தொடர்ந்து இவ்வாறான போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். சித்திரப்போட்டிகள் மாத்திரமன்றி கணிதப்போட்கள் மற்றும் வெவ்வேறு வகையான போட்டிகளில் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். இதனூடாக வரலாற்றில் தங்களுடைய பெயர்களையும் பதியலாம் எனவும், மேலும் கால சூழ்நிலைக்குப் பொருத்தமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்த புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பிற்கும் தனது நன்றிகளையும் இதன்போது தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் பாடசாலை விடுமுறை நாட்களில் சிரார்கள் தமது ஓய்வுகளை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்துவதுடன் அவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தல் மற்றும் சந்தோசமாக ஓய்வு நேரத்தினைச் செலவிடல் என்ற நோக்கத்திற்கிணங்க மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இவ் ஓவியப்போட்டி நடாத்தப்பட்டது.
இப்போட்டியில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமிருந்து 700 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றி தமது ஓவியப் படைப்புக்களை அனுப்பி வைத்திருந்தனர். 6 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட ஆரம்பப் பிரிவு மற்றும் 11 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட இடைநிலைப்பிரிவு என இரு பிரிவுகளாக நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 6 சிறுவர்களுக்கும், ஆறுதல் பரிசு பெற்ற 44 சிறுவர்களுக்குமாக மொத்தம் 50 சிறுவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டசிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ.குகதாசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திருமதி மயூரன் மேரி லம்பேட், அலுவலகப் பொறுப்பாளர் எம். ஜயராஜன், சிறுவர் நலன் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.