மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை பகுதியில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம் ஒன்றில் சரும நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் இன்று சுவிஸ் உதயம் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை உறுப்பினர்களின் களவிஜயத்தின்போது குறித்த பிள்ளைகளின் நிலைமைகள் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சனின் பிள்ளைகளின் நிதியுதவியுடன் குறித்த இரு பிள்ளைகளுக்கு தேவையான சத்துணவுகள் மற்றும் மருந்துப்பொருட்கள்,உலர் உணவுப்பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி றோமிலா செங்கமலன் தலைமையில் குறித்த உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த குடும்பத்தினர் மிகவும் வறிய நிலையில் இரண்டு பிள்ளைகளையும் பராமரித்துவருவதுடன் அவர்களுக்கான சத்துணவுகள் மற்றும் மருந்துகளுக்கு பெரும் செலவுகள் ஏற்படுவதாக சுவிஸ் உதயம் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
குறித்த குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் சரும நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பிள்ளை பாடசாலைக்கு கல்வி கற்க செல்லும் நிலையில் 14வயது சிறுவன் பாடசாலை கல்வியை இடைநிறுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டதாக குறித்த பிள்ளைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.