நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளாமல், அரசமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளை சவாலுக்குட்படுத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலமாகத் தோற்கடிக்கப்பட்ட நபரை, பிரதமராக ஏற்றுக்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்பதால், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக அம்முன்னணி அறிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ, ஒரு பொறுப்புமிக்க அரசியல்வாதி என்றால், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக இரண்டு தடவைகளும், தன்னுடைய உரையின் ஊடாக ஒருதடவையும் தோற்கடிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலகிக்கொள்ளவேண்டும் என்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன