ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான தொலைபேசி குரல் பதிவு, பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் தலைவரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவின் குரல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.
படுகொலை சதித்திட்டம் தொடர்பாக தொலைபேசி உரையாடல் பதிவிலுள்ளடங்கப்பட்ட விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பிரதிப் பொலிஸ்மா அதிபருடைய குரலென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க பகுப்பாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சந்தர்ப்பதிலும் கைது செய்யப்படலாமென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளரான நாமல் குமாரகே ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் அண்மையில் வெளியாகி இலங்கை அரசியலில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.