உண்மையை கண்டறியம் பொறிமுறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாவது சாட்சியாக சாட்சியமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
(ஞாயிற்றுக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்டபின்னர் அங்குள்ள இலங்கையர்களிடத்தில் உரையாற்றியிருந்தார்.
அதன்போது, இறுதி யுத்தத்தில் இறுதி இரண்டு வாரங்களில் நடந்த உண்மை தனக்கு மட்டும் தான் தெரியும் என்று தெரிவித்தார்.
அவ்வாறெனின் உண்மையை கண்டறியம் பொறிமுறையிலே அவர் முதலாவது சாட்சியாக சாட்சியம் கொடுக்க வேண்டும்.
இறுதி யுத்தத்திலே பல சர்வதேச குற்றங்கள் யுத்தத்திலே ஈடுபட்ட இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டன என்று இரண்டு சர்வதேச அறிக்கைகள் இப்போது இருக்கின்றன.
இதில் ஒன்று நிபுணர்களின் அறிக்கை, மற்றையது ஐக்கிய நாடு மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை.
இவ்வறிக்கைகளில் இரண்டு தரப்பினரும் யுத்தங்குற்றங்களிலே ஈடுபட்டார்கள் என்று வகைபிரித்து சுட்டிக்காட்டுகிறார்கள். ஆகையினாலே அவற்றை குறித்து உண்மை கண்டறியப்படவேண்டிய பொறிமுறை நடத்தப்படுவது அத்தியவசியமானது.
நிலைமாறுதல் என்ற நீதியில் முதலாவது தூணாகக் கருதப்படுவது உண்மையைக் கண்டறிதல் என்பதையே.
அதனைவிடுத்து ஒருதரப்பை மட்டும் குற்றம் சுமத்துகின்ற திட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.