ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்ட வேலைகளை மேற்பார்வை செய்துவைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரையும் பிரதேச செயலக மட்டத்திலும்,மாவட்ட செயலக மட்டத்திலும் இடம்பெறவுள்ளது.இறுதி நிகழ்வுக்கு(12)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகைதந்து ஜனாதிபதி செயலகத்தினால் முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்படுகின்ற வேலைகளை நிறைவு செய்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
இவ்விடயமாக கலந்துரையாடல் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன்(காணி)சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,திட்டபணிப்பாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.
ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியுடனும்,மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி,ஸ்மாட்லங்கா,விவசாய விஷேட வேலைத்திட்டம்,தேசிய சுற்றாடல் பிரச்சனை,உணவு உற்பத்தி, போதைப்பொருள்,சிறுவர் பாதுகாப்பு,நிலையான பாடசாலை அபிவிருத்தி,விஷேட தேவையுடையோர் மற்றும் முதியோருக்கான வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கும்,அதன் முன்னேற்ற செயற்பாடு பற்றி அறிந்து கொள்வதற்கும் ஜனாதிபதி வருகைதரவுள்ளார்.
இவ்வேலைத்திட்டத்தில் புத்தளம் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டதாகும்.இவற்றில் புத்தளம் மாவட்டத்திற்கான வேலைகளை ஜனாதிபதி மைத்திரிபால நேரடியாக சென்று பார்வையிட்டு முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.