தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நாங்கள் உண்ணஉணவின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். அரசாங்கம் எங்களுக்கென விசேட நிவாரணத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட வினாயகபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளானவர் கள் தெரிவித்தனர்.
குறித்த தனிமைப்படுத்தப்பட்டு விடுதலையான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கவேண்டுமென வினாயகபுர மகளிர்சங்கத்தலைவி திருமதி மேரி விடுத்தவேண்டுகோளுக்கிணங்க அம்பாறை மாவட்டத்தின் சமுகசெயற்பாட்டாளர் கி.ஜெயசிறில் உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தபோது அவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
திருக்கோவில் வீரையடிவீதி வினாயகபுரம் 1ஜச்சேர்ந்த சுந்தரலிங்கம் சேனாதிராசா(வயது46) கூறுகையில்:
நான் கடந்த 2020.2.2ஆம் திகதி சக தொழிலாளிகளுடன் முல்லைத்தீல மல்லாவிக்கு வழமைபோல மேசன் வேலை செய்யச்சென்றேன். அவ்வேளையில் கொரோனாப் பிரச்சினை எழுந்தது. வேலைகள் ஸ்தம்பிதமானது. நாம் ஊருக்குப்போகவேண்டுமானால் தனிமைப்படுத்தல் செய்யவேண்டுமென்பதற்காக அங்குள் பிஎச்ஜ பொலிசாரின் பணிப்பிற்கிணங்க தனிமைப்படுத்தலுக்குள்ளானோம்.
இறுதியில் விடுவிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு பொலிஸ் பாஸ் வழங்கப்பட்டதும் 2020.03.30ஆம் திகதி சொந்தஊரான வினாயகபுரம் வந்துசேர்ந்தோம். இங்கு வந்ததும் இங்குள்ள பிஎச்ஜ வந்து தனிமைப்படுத்தல் செய்யவேண்டும் என்றார்.
மறுநாள் 31ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 13ஆம் திகதிவரை 14நாட்கள் நானும் மனைவி இருபிள்ளைகள் உட்பட நால்வர் தனிமைப்படுத்தலுக்குள்ளானோம். வெளியில் செல்லமுடியாது. போதிய உணவும் இல்லை. நிறைவில் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான எம்ஓஎச் சான்றிதழ் தந்தார்.
பின்பு கிராமசேவையாளர் உலருணவு தந்தார். இன்று நீங்கள் தருகிறீர்கள்.
ஆனால் நிரந்தரமாக பிறரிடம் கையேந்தாமல் சொந்தக்காலில் வாழமுடியாதநிலை தோன்றியுள்ளது. தொழிலின்மையே காரணம்.
தொழிலுக்குப்போகமுடியாமல் குடும்பத்தைக் கவனிக்கமுடியாதநிலையில் தவிக்கிறோம்.
அரசாங்கம் எம்மைப்போன்றவர்களை ஒருகணம் திரும்பிப்பார்க்கவேண்டும். என்றார்.
அதே வீதியைச்சேர்ந்த ஜெகநாதன் சஞ்சீவன்(வயது17) கூறுகையில்:
நான் படித்தவிட்டு குடும்பக்கஸ்டம் காரணமாக குழாய்வேலை பிளம்பிங் வேலை செய்வேன். தொழில்நிமித்தம் மார்ச் 18இல் கண்டி சென்றேன். அங்கு கொரோனாப்பிரச்சினை தலைதூக்கியபோது நாம் அங்குள்ளவர்களிடம் பாஸ்பெற்று ஏப்ரல் 10இல் வீடுவந்துசேர்ந்தேன்.
அன்றிலிருந்து 14தினங்களுக்கு குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்டேன்.அப்பா மேசன்வேலை செய்பவர். உணவுக்கு கஸ்ட்டப்பட்டோம். இறுதியில் சான்றிதழ்தந்தார்கள்.
இப்போ தொழில் இல்லை. பணம் இல்லை. வெளியிலும் செல்லமுடியாது. வாழவழியின்றி தவிக்கிறோம். யாராவது வழிகாட்டுங்கள் என்றார்.
மற்றுமொரு மேசன்தொழிலாளியான விஸ்வலிங்கம் பிரமானந்தன் (வயது 44 )கூறுகையில்:
நான் ஏலவே கூறிய சேனாதிராசாவுடன் மல்லாவி சென்று வந்து அவரைப்போலவே நானும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப் பட்டவன். உணவு என்றால் கஸ்ட்டம். தனிமைப்படுத்தல் காலகட்டத்தில் மேரிஅக்காதான் அவ்வ்ப்போது உணவுகளைத்தருவார்.
இன்று தொழிலின்றி வாழ்வாதாரமின்றி தவிக்கின்றோம். அரசாங்கம் எம்மைக்கவனிக்கவேண்டும். என்றார்.
வினாயகபுரம் மகளிர்சங்கத்தலைவி மேரி கூறுகையில்:
விதவைகளோ தனிமைப்படுத்தலுக்குள்ளானர்களோ நலிந்தவர்களோ யாராயினும் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக உலருணவுகளை வழங்கியிருக்கவேண்டும்.எனக்குரி ய 5000ருபாகூட இக்கணம்வரை வழங்கப்படவில்லை.
இப்பகுதியில் ஓரளவு உலருணவு நிவாரணமே வழங்கப்பட்டன. நான் காரைதீவுதவிசாளரிடம் கேட்டபோது அவர் வந்து இன்று இங்கு வழங்கினார். அதுபோல இங்குள்ள ஏனையோரும் செய்யவேண்டும். என்றார்.