தமிழ்மக்களுக்கான சேவைகளை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது; கோடீஸ்வரன்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ அல்லது எம்மையோ எந்தச்சக்தியாக இருந்தாலும் குழப்பவோ அல்லது மக்கள் சேவைகளைத்தடுக்கவோ முடியாது, மக்களுக்காக எந்தவேளையிலும் எங்களது சேவை தொடர்ந்துகொண்டிருக்கும் என திகாமடுள்ள மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் (30) தெரிவித்தார்.

கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பெரியநீலாவணை சுனாமித்தொடர்மாடியில் வசிக்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களது சொந்த நிதியில் வழங்கிவைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெரியநீலாவணையில் வசிக்கும் சமூகத்தொண்டன் கோகுலன் அவர்களது வேண்டுகோளின்பேரில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு கோகுலன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வின் போது அப்பகுதியில் தரம் 1-11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்..

எமது சேவையானது எதனையும் எதிர்பார்த்ததல்ல பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதே என்னுடைய நோக்கமாக இருக்கின்றதே தவிர எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெறும் நோக்கில் உதவிசெய்ய வரவில்லை .

இந்த தொடர் மாடியில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் நான் இங்குவருவது வழமை அண்மையில் சுழல் காற்றின் மூலம் கூரைத்தகடுகள் காற்றில் பறந்தபோது உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு மக்களது தேவைகளை நிறைவுசெய்தேன். மீண்டும் இங்கு நான் வருகைதரும் போது உங்களுக்கான பலவேலைகள் நிறைவுசெய்த பின்புதான் வருவேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு இருக்கின்றனரோ அவர்களைத்தேடிச்சென்று உதவுவதே என்னுடைய குறிக்கோளாக இருக்கின்றது, இன்று என்னால் இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்படுகின்றது. இதனைப்பெறுகின்ற மாணவர்கள் உதவி பெற்றோம் என்று இருக்காது கல்வியில் அதிக நாட்டம் செலுத்தவேண்டும் கல்வியில் யாருக்கும் அக்கறையோ முயற்சியோ இல்லாவிட்டால் உங்களது எதிர்காலம் இருட்டறையாக மாறிவிடும் என்பதனை உணர்ந்து ஒவ்வொரு சிறுவர்களும் கல்வியில் அதிக அக்கறை காட்டவேண்டும்.

அவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்கள் தவறிவிடக்கூடாது ஒவ்வொரு பிள்ளையும் சிறந்த பிரஜையாக வருவதற்கு பெற்றோர்களே பொறுப்புடன் செயற்படவேண்டும் அப்போது பிள்ளைகள் கல்வியில் மட்டுமல்ல அனைத்து விடயங்களிலும் முன்னுதாரணமாகவும் ஏனைவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருப்பார்கள்.

பெரியவர்கள் என்ன தவறுகளை விடுகின்றமோ அதனைச் சிறுவர்கள் அவதானித்து நாம் செய்யும் தவறை அவர்களும் செய்ய முனைவார்கள், ஆகையால் பெற்றோர்களாகிய நாம் செய்யும் ஒவ்வொருவிடயமும் அவதானமாக இருக்கவேண்டும் என்றார்.

Related posts