பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 5 யோசனைகளை முன்வைத்தார் சம்பிக்க
தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்து, எதிர்காலத்தைச் சுபீட்சமாக்குவதற்கான ஐந்து யோசனைகளை, ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில், 17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, ஐந்து யோசனைகளையும் முன்வைத்து உரையாற்றிய அமைச்சர், யுத்தத்துக்குள் மறைந்துகொண்டு, தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பல்வேறு குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி, மன்னிப்பளிப்பதாகும் என்று கூறினார்.
யுத்தம் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள், சட்ட மா அதிபர் திணைக்களத்தால், தனித்தனியே கண்டறியப்பட வேண்டுமென்றும், அமைச்சர் கோரினார்.
ஊடக சந்திப்பில் தொடர்ந்துரைத்த அமைச்சர் சம்பிக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதச் செயற்பாடுகள் தோல்வியடைந்து, அடுத்த மே மாதத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், அதனால் ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு, இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் இப்பிரச்சினைகள், ஒன்றோடொன்று பிணைந்த வகையில், வேறு தோற்றத்துடன் கூடிய வேறு பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன என்றும் கூறினார்.
ஆயுதம் ஏந்தியவர்களில் 12 ஆயிரம் பேர், புனர்வாழ்வு பெற்று, சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 60 பேரில் சிலருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறிய அமைச்சர், யுத்த காலத்தோடு தொடர்புபட்ட சில சம்பவங்களுக்குக் காரணமானபாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலருக்கு எதிராகவும், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, தண்டனைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதேபோன்று, யுத்தத்துடன் தொடர்புபடாத வேறு குற்றங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களால், பாதுகாப்புப் படையிலும் சமூகத்திலும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதெனக் கூறிய அமைச்சர், இதனால், நாம் முறையானதொரு கொள்கையைக் கடைபிடிப்பது இல்லையென்ற, சர்வதேசக் குற்றச்சாட்டுக்கும் இலக்காகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“சர்வதேசத்தின் கூற்றுக்கிணங்க, சட்டம் முறையாகக் கடைபிடிக்கப்படுமாயின், புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய நேரிடும். காரணம், அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுவிக்கவோ, முன்னாள் ஜனாதிபதியால், எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமோ அல்லது ஒழுங்குப் பத்திரமோ கொண்டுவரப்படவில்லை. அதனால், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சட்டவிரோத அமைப்பாகக் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்ய நேரிடும்.
விசேடமாக, புலிகள் இயக்கத்தின் முதன்நிலைத் தலைவர்களான ராம், நகுலன், கே.பி போன்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று சுதந்திரமாக உள்ளனர். அண்மைக் காலமாக, பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், மேற்கண்ட புலி உறுப்பினர்களுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. அதனால், சட்டம் அனைவருக்கும் ஒரே விதத்தில் கடமையைச் செய்யுமாயின், இவர்கள் விடயத்திலும் அதையே செய்திருக்க வேண்டும்.
“இதேவேளை, சில உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகளும் சரி, வெளிநாட்டு அரசியல்வாதிகளும் சரி, எல்ரிரிக்கு தண்டனை வழங்க முடியாதென்றும் ஆனால், பாதுகாப்புப் படையினருக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். காணாமற்போனோர் அமைப்புகளை உருவாக்கி, போராட்டங்களை நடத்துகின்றனர்.
“உண்மையில், இந்தப் பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதை வைத்துக்கொண்டு, மேலும் பல தசாப்தங்களை இல்லாது செய்துகொள்ள முடியாது. இந்த நாட்டில், எல்ரிரிஈ மட்டும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாறாக, ஜே.வி.பியினரும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தான். ஆனால், அவர்களுக்கு என்ன நடந்தது? இறுதியில் அரசாங்கத்தால், மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர்களும், தமது தவறைப் புரிந்து ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
அந்த வகையில், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, ஐந்து யோசனையை முன்வைக்க விரும்புவதாகக் கூறிய அமைச்சர் சம்பிக்க, இந்த ஐந்து விடயங்களையும், ஒரே தடவையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லாவிட்டால், இதனால் எவ்விதப் பயனும் இல்லையென்றும் கூறினார்.
“ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான, சட்ட மா அதிபர் திணைக்களத்தோடு இணைந்த சட்டத்துறை வல்லுநர்களைக் கொண்டு, கைதாகியுள்ள எல்ரிரிஈயினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அவர்களது குற்றங்களின் அடிப்படையில் வகைப்படுத்திக் கொள்ளுங்கள்.
“இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டவர்களில், யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்ட பாதுகாப்புத் தரப்பினர், படையினருக்கு ஒத்தாசை வழங்கிய தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களை, பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
“அதேபோன்று, தற்போது சிறையிலுள்ள எல்ரிரிஈ உறுப்பினர்களில், யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்டவர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்குவதோடு, அவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். காரணம், அவர்கள் சுமார் 60 பேர் மாத்திரம் தான் உள்ளனர். இந்தப் 12,600 பேரையும் விட, பாரிய குற்றங்களைச் செய்தவர்கள், சுதந்திரமாகத் தற்போது வெளியில் தான் உள்ளனர். இதனால், பல தசாப்தங்களாக அவர்களைத் தடுத்து வைத்திருப்பதில், எந்தவொரு பயனும் இல்லை. இதனால், பாதுகாப்புப் படையினரோடு சேர்த்து, மேற்படி 60 பேரையும் விடுவிக்க வேண்டும்.
“இதேவேளை, சிறுவர் கடத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்புணர்வு, மனிதப் படுகொலை போன்ற குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கி, அந்தப் பிரச்சினைகளை அத்தோடு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவற்றைப் தொடர்வதால், எந்தப் பயனும் இல்லை.
“ஐந்தாவதாக, பொது மன்னிப்பை வழங்கி, இந்த நாட்டை ஒன்றிணைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. இது தொடர்பில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தமிழ்க் கட்சி, முஸ்லிம் கட்சி, உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்பினர் என, அனைவரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நடவடிக்கை எடுத்ததன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பில் பேசவேண்டிய தேவை ஏற்படாது.
“அதன் பின், தமிழ்க் கூட்டமைப்பு, சிங்களக் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பென, யுத்தம் பற்றி எவரும் பேசாமல், நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கான பணிகளை நோக்கி, நாம் அனைவரும் நகர வேண்டும். அதனால், நூற்றுக்கும் குறைவாகவுள்ள தமிழ்க் கைதிகளை விடுவித்து, அவர்களுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர்களை இந்த ஜனநாயகப் பொறிமுறைக்குள் கொண்டுவர முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறே, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம், நாம் வலியுறுத்துகிறோம்.
“மன்னிப்பு தொடர்பில், கடந்த காலத்திடமிருந்து பாடம் படித்துக்கொண்டுள்ள நாம், அந்தக் கடந்த காலத்துக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம், எதிர்காலத்தைச் சுபீட்சமாக்கிக் கொள்ளும் யோசனையை, இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் முன்வைக்கிறோம்” என, அமைச்சர் மேலும் கூறினார்.