தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, அக்கரைப்பற்று பதில் நீதவான் எஸ்.ஏ. ஆர். ஆகிலா, இன்று (01) அனுமதியளித்தார்.
பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிர்வாகக் கட்டடத்தை, இரு வாரங்களாக தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ஆக்கிரமித்து பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரால் இம்மாணவர்களுக்கெதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மாணவர்களை, நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தும், இதனை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலும் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கமைய, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி, 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களை, இன்று (01) மீண்டும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ஏ.ஆர். ஆகிலா முன்னிலையில் ஆஜர் செய்த போதே, ஒவ்வொருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து வகுப்புத் தடை விதிக்கப்பட்ட, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 24 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மேற்படி மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்திருந்தனர்.