இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இருபத்தியைந்து வருடங்கள் நிறைவுற்றதனை முன்னிட்டு தொகுக்கப்பட்ட நினைவு மலர் உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் உபவேந்தர் பேராசிரியர் அபூவக்கர் றமீஸ் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நினைவு மலரின் பிரதம ஆசிரியரும் நூலகருமான எம்.எம். ரிபாஉத்தீன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மஸாஹிர், பதிவாளர் எச். அப்துல் சத்தார் உள்ளடங்கலான நினைவு மலர் பதிப்புக் குழுவினர் கலந்துகொண்டனர்.
வெள்ளி விழா நினைவு மலரின் மின்னியல் பதிப்பு 23.10.2021 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெள்ளி விழா நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்போதிலும் நினைவு மலரின் அச்சுப் பதிப்பே உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் நினைவு மலரின் முதற் பிரதியினை மலரின் பிரதம ஆசிரியர் எம்.எம். ரிபாஉத்தீன் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் அபூவக்கர் றமீஸ் அவர்களுக்கு வழங்கிவைத்தார். உபவேந்தர் அவர்கள் தமது கரத்தினால் பீடாதிபதிகள், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளடங்கலான மலர் குழுவினருக்கான மலரின் பிரதிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கருத்துவெளியிட்ட நினைவு மலரின் பிரதம ஆசிரியர் நூலகர் எம்.எம். ரிபாஉத்தீன், மலர் வெளியீட்டுக் குழுவினருக்கு நன்றி கூறியதுடன் வெள்ளி விழா மலரொன்றினை வெளியிடுவதில் உபவேந்தர் அவர்கள் காட்டிய அக்கறையினை சிலாகித்துப் பேசியிருந்தனர். அவர் மேலும் குறிப்பிடும்போது, கொவிட் நெருக்கடி தீவிரமடைந்திருந்த காலத்தில் இந்நினைவு மலரினைத் தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது மலருக்கான தகவல்களை திரட்டிக் கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. இருந்தபோதிலும் உபவேந்தர் உட்பட மலர் குழுவினர் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாக உரிய தரவுகளைத் திரட்டிக்கொண்டு நினைவு மலரினை வெளியிட முடிந்திருக்கிறது. இந்நினைவு மலர் இப்பல்கலைக்கழகத்தின் கடந்த காலத்தினை திரும்பிப் பார்ப்பது மட்டுமன்றி அதன் சாதனைகளை மீட்டிப்பார்ப்பதற்கான ஒரு ஆவணமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூவக்கர் றமீஸ் உரையாற்றுகையில், குறுகிய காலத்திற்குள் வெள்ளி விழா நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்து, அதில் நினைவு மலரொன்றினை வெளியிடும் கடினமான தீர்மானத்தினை நாம் எடுத்தோம். எமது பல்கலைக்கழகத்தின் கடந்தகால, நிகழ்கால வரலாற்றினையும் சாதனைகளையும் தொகைப்படுத்தி ஒரு மலராக வெளியிட வேண்டும் என்ற பலரின் அர்ப்பணிப்பின் மூலமே இவ்விடயம் இன்று சாத்தியமாகியிருக்கிறது. இம்மலர் பல்கலைக்கழகம் குறித்த அரிதான பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு வரலாற்று ஆவணமாக இம்மலர் திகழும் என்று தான் நம்புவதாக உபவேந்தர் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த மலரின் பிரதம ஆசிரியர் உள்ளடங்கலான மலர் குழுவினருக்கு உபவேந்தர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.