தேர்தலில் இனப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வை யார் நியாயமாக எங்களுக்கு தருகின்றார்களோ அவர்களுக்கு நாங்கள் ஆதரவு

(க.விஜயரெத்தினம்)
இனப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வை யார் நியாயமாக எங்களுக்கு தருகின்றார்களோ அவர்களுக்கு நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிப்பு.

இனப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வை மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த வேட்பாளரோ,ரணில் விக்கிரமசிங்க அணியைச் சேர்ந்த வேட்பாளரோ,மைத்திரிபால அணியைச்சேர்ந்த வேட்பாளரோ அல்லது ஜே.வீ.பீ அணியைச் சேர்ந்த வேட்பாளரோ எங்களுக்கு தருகின்றபோது நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம்.எங்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு கிடைக்க வேண்டும்.அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.தீர்வு எனும் விடயத்தில் நாங்கள் பிந்திச் செல்லும்போது எங்களுடைய அபிவிருத்தி பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின்  நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(10)மாலை 6.00மணியளவில் ஆசிரியர் வாண்மைவிருத்தி மத்திய நிலையத்தின் முகாமையாளர் எம்.சச்சிதானந்தம் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தாழங்குடா கல்வியல்கல்லூரியின் பீடாதிபதி கே.புண்ணியமூர்த்தி,தொழிநுட்ப உத்தியோகஸ்தர்கள் எஸ்.சிவசங்கர்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் …
நாங்கள் இந்த நாட்டிலே 1949ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கான நிரந்தரமான,நியாயமான அரசியல்தீர்வைப் பெறுவதற்காக சாத்வீகரீதியில் போராடினோம்.அதன்பின்பு எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.36 தமிழ் விடுதலை இயக்கங்கள் தோற்றம்பெற்று தமிழ்மக்களின் வாழ்வுக்காகவும்,அவர்கள் நிம்மதிக்காகவும் போராடினார்கள்.போராட்டத்தினால் தமிழ்மக்கள் உயிர்,உடமைகள்,சொத்துக்கள் உட்பட பல்வேறு வகையான இழப்புக்களை எதிர்கொண்டு சாவால்களுடன் வாழ்ந்து  வந்தார்கள்.

அதன்பின்பு 2009ஆம் ஆண்டிலே நாட்டிலே யுத்தம் மௌனிக்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலே நாங்கள் எதிர்கட்சியில் இருந்து 18தடவைகள் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக அவருடன் பேசினோம்.அவர்களுடன் இணைந்து போனோம்.எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.அதற்கிடையில் பல ஒப்பந்தங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நடந்தது.அப்பேச்சுவார்த்தை பல அமுக்கக்குழுவோடு நடைபெற்றது.எங்களுடைய அரசியல்கட்சியோடும் நடைபெற்றது.அதேபோன்று ஆட்சியாளராக இங்கிருந்த ஜனாதிபதியாக இருக்கலாம்;பிரதமராக இருக்கலாம்.அவர்கள் தமிழ்மக்களுக்கான நியாயமான ஒரு தீர்வை வழங்கவேண்டுமென்று கூறியிருக்கின்றார்கள்.அதேபோன்று இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழ்மக்களுக்கான நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஒப்பந்தத்தில் காட்டப்பட்டுள்ளது.இவை அனைத்தும் இந்த நாட்டிலே உள்ள சிங்கள பேரினவாத அரசாங்கம் வாயால் வடை சுட்ட நிலைமைக்குத்தான் சென்றிருகின்றது.இதுவரையும் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கான நியாயமான தீர்வை இன்றுவரையும் தந்ததாக இல்லை.அவர்களை இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டளவில் போர் மௌனித்தாலும் அதன் பின்னர் பேசிய பேச்சுவார்த்தையிலும் ஏதாவது தீர்வு கிடைக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்தது.அந்த தீர்வு இல்லை.கடைசியாக ஆட்சியாளருக்கு ஆதரவு கொடுத்தோம்.2015ஆம் ஆண்டளவில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த நாட்டின் ஜனாதிபதியை மாற்றியமைத்து புதிய ஜனாதிபதியை கொண்டு வந்தோம்.அத்துடன் ஆட்சியமைப்பதில் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் வகையில் தமிழ்மக்களுக்கும்,தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் எதிராகவிருந்த இரண்டு ஆட்சியாளர்களையும் தந்திரோபாயமாக ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஆட்சியில் இறுத்தி ஆதரவு கொடுத்தோம்.அவர்களின் ஒரு வடிவமாக இதுவரை தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளாத அரசியல்யாப்பு தயாரிக்கின்ற பங்களிப்பில் தமிழர்களின் பங்களிப்பையும் சேர்த்தார்கள்.அதில் நாங்கள் இணைந்துகொண்டு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றி அதிலே வழிநடத்தும் குழுக்களை ஏற்படுத்தி 88தடவைகள் இதுவரையும் அந்தக்குழுக்கள் கூடியிருக்கின்றது.

இவ்வாறு அரசியலமைப்பு குழுக்கள் ஒன்றுகூடி ஒரு இடைக்கால அரசியல்தீர்வு கிடைக்கவிருந்தது.இடைக்கால அறிக்கையானது 5நாட்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திலே விவாதிக்கப்பட்டு எல்லாக்கட்சியும் ஏற்றுக்கொண்டது.ஒரு அரசியல்கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது.அந்த இடைக்கால அறிக்கையின் பின்னர் இறுதி வடிவம் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட முன்னேற்பாடுகள் கடந்த வருடம் கார்த்திகை 7ம் திகதி வரவிருக்கின்ற காலத்தில்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஒரு சூழ்ச்சியை எற்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைக்கு ஏற்படுத்தினார்.

ஆனால் தமிழ்மக்களுக்கான நியாயமானதீர்வு வரும்போதுதான் இங்கே இருக்கின்ற சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் எங்களோடு நாடகமாடுவதைத்தான் நாங்கள் கருதுகின்றோம்.முன்பு ஒரு கொழுக்கட்டை அரசாங்கம் இருந்தது.தற்போது மோதகம் போன்றதொரு அரசாங்கம் இருந்தது.உள்ளடைப்பு ஒன்றாகத்தான் உள்ளது.ஆனால் வடிவம்தான் மாறியிருக்கின்றது.ஆகவே இந்த அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் ஆதரவு கொடுத்து வந்துள்ளோம்.அவர்கள் கூட எங்களுக்கு தீர்வு தருவதாக கூறினார்கள்.இன்றுவரை தமிழ்மக்களுக்கான நியாயமான தீர்வுகள் எட்டவில்லை.அது கிடங்கிலே கிடக்கின்றது.கிடப்பிலே போட்டிருக்கின்றார்கள்.எதிர்பார்க்கின்றோம் தீர்வு கிடைக்கும் என்று.ஏதோ இந்த அரசாங்கம் தீர்வு விடயத்தில் எங்களுடன் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்துள்ளோம்.அது கிடைக்கவில்லையாயின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே யார் தமிழ்மக்களுக்கான நியாயமான அரசியல்தீர்வை தருகின்றார்களோ அவர்களை தமிழ்மக்களுடன் ஏற்றுக்கொண்டும்,மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்ததுடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்து முடிவைச் சொல்லுகின்ற எங்களுடன் ஒப்பந்தம் செய்துகின்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கே நாங்கள் ஆதரவு கொடுக்கக்கூடிய நிலைப்பாட்டில் முழுமையான ஆதரவைக் கொடுக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இனப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வை மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த வேட்பாளரோ,ரணில் விக்கிரமசிங்க அணியைச் சேர்ந்த வேட்பாளரோ,மைத்திரிபால அணியைச்சேர்ந்த வேட்பாளரோ அல்லது ஜே.வீ.பீ அணியைச் சேர்ந்த வேட்பாளரோ எங்களுக்கு தருகின்றபோது நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம்.எங்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு கிடைக்க வேண்டும்.அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.தீர்வு எனும் விடயத்தில் நாங்கள் பிந்திச் செல்லும்போது எங்களுடைய அபிவிருத்தி பாதிக்கின்றது.எங்கள் மக்களுக்கு நாங்கள் நேரடியாக அபிவிருத்தியை செய்ய முடியாமல் உள்ளோம்.ஏன்னென்றால் அபிவிருத்தி எனும் மோகத்தில் நாங்கள் இறங்கிப்போனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு பின்தள்ளப்படும்.நீண்டகாலம் தியாகத்துடன் போராடிய நம்மறவர்களின் எண்ணங்களுக்கு துரோகம் செய்தவர்களாக மாறுவோம்.ஆகையால் விரைவான,நிறைவான தீர்வைப்பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்க்கதரிசனமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது எனத்தெரிவித்தார்.

Related posts