கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான மீளாய்வுப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப் படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 456 பேரின் பெயர் விபரங்கள் கிழக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டன.
இதில் பெயர் இடம்பெறாத பலர் தாம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதில் தம்மையும் உள்ளடக்க வேண்டுமெனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமையிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதனையடுத்து இது தொடர்பான மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான வாய்ப்பு கடந்த மாதம் 31 ஆம்திகதிவரை ஆளுநரின் செயலாளரினால் வழங்கப் பட்டது.
இந்த வகையில் 1666 பேர் நேரடியாகவும், 492 பேர் பதிவுத்தபால் மூலமும் தமது முறையீடுகளை செய்திருந்தனர். இந்த முறையீடுகள் தொடர்பான மீளாய்வே அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப் படவுள்ளது.
இதற்காக ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன் ஆகிய மூவர் கொண்ட குழுவை ஆளுநர் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.